போட்டி நிறுவனங்களுக்காக ‘மூன்லைட்டிங்’ செய்த 300 பேர்: கொந்தளிக்கும் விப்ரோ தலைவர்!

ரிஷத் பிரேம்ஜி
ரிஷத் பிரேம்ஜி

விப்ரோ நிறுவனத்தைச் சேர்ந்த 300 ஊழியர்கள், ‘மூன்லைட்டிங்’ முறையில் போட்டி நிறுவனங்களுக்காகவும் வேலை செய்தது தெரியவந்திருப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் ரிஷத் பிரேம்ஜி கூறியிருக்கிறார். அதற்குத் தண்டனையாக அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறியிருக்கும் அவர், மூன்லைட்டிங் குறித்த தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மூன்லைட்டிங் என்றால் என்ன?

நிறுவனத்துக்கு வெளியே வீட்டிலோ அல்லது வேறு இடத்திலோ தங்கி பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் வேலை நேரம் போக மற்ற நேரங்களில் பிற நிறுவனங்களுக்காக வேலை பார்ப்பது, வேறு பிராஜெக்ட்களைச் செய்துகொடுப்பது போன்றவை மூன்லைட்டிங் எனும் பதத்தால் குறிக்கப்படுகின்றன. அதாவது, ஒரு வேலையில் இருந்துகொண்டே இரண்டாவது வேலையையும் பார்ப்பது மூன்லைட்டிங் என அழைக்கப்படுகிறது. ஸ்விகி போன்ற சில நிறுவனங்கள் இதை ஆதரிக்கின்றன. எனினும், பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் மூன்லைட்டிங்கை முற்றிலுமாக எதிர்க்கின்றன.

விப்ரோ தலைவர் அசீம் பிரேம்ஜி, “மூன்லைட்டிங் குறித்து தொழில்நுட்பத் துறையில் நிறைய பேசப்படுகிறது. அது நிச்சயமாக ஒரு ஏமாற்று வேலை. மோசடி” என்று கடுமையாக விமர்சித்திருந்தார். அவரது மகன் ரிஷத் பிரேம்ஜியும் மூன்லைட்டிங் முறையைச் சாடியிருந்தார்.

‘நிறுவனத்திடம் ஒப்புதல் பெறாமல், எந்த ஒரு நிறுவனத்தின் இயக்குநர், பங்குதாரர், உறுப்பினர், முழு நேர அல்லது பகுதி நேர வேலையிலும் ஈடுபட அனுமதி கிடையாது. இந்த ரீதியில் எந்த விதமான வணிகச் செயல்பாட்டையும் அனுமதிக்க முடியாது’ என இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இப்படிச் செயல்படுபவர்கள் பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்திருந்தது.

300 பேர்

இந்நிலையில், டெல்லியில் ஹோட்டல் தாஜ் பேலஸில் நடந்துவரும் அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் தேசியக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய ரிஷத் பிரேம்ஜி, மூன்லைட்டிங் குறித்துப் பேசினார்.

அப்போது, “விப்ரோ நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டே, எங்கள் போட்டி நிறுவனங்களில் ஒன்றுக்கு நேரடியாகவே வேலை பார்ப்பவர்கள் உண்டு. கடந்த சில மாதங்களில் மட்டும் அப்படி வேலை செய்த 300 பேரைக் கண்டறிந்திருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், நிறுவனத்தின் ஒருமைப்பாட்டை மீறும் செயலில் ஈடுபட்டதற்காக அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறினார்.

மூன்லைட்டிங் விஷயத்தில் ஐடி நிறுவனங்கள் காட்டும் கடுமை, அதைப் பின்பற்றும் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in