மாணவர்களுடன் போராட்டத்தில் களமிறங்கிய முன்னாள் அமைச்சர்!

மாணவர்களுடன் அமர்ந்திருக்கும் ஆர் காமராஜ்
மாணவர்களுடன் அமர்ந்திருக்கும் ஆர் காமராஜ்

தங்கள் கல்லூரியை வேறு ஊருக்கு இடம் மாற்றக்கூடாது என்று போராடிவரும் மாணவர்களோடு முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜும்  இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம், குடவாசலில் கடந்த அதிமுக ஆட்சியில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரி துவக்கப்பட்டது.  அங்குள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் அந்த கல்லூரிக்கு வேறு இடம் பார்த்து புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடுகள் நடந்து வந்தன.  இந்த நிலையில் கடந்த தேர்தலில்  ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது.

அதனால் குடவாசல் அரசு கலைக்கல்லூரி கட்டிடம் கட்டுவது கிடப்பில்  போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கல்லூரியை கொரடாச்சேரி அருகில் உள்ள செல்லூருக்கு இடம் மாற்ற திமுக அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.  அதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை ஏற்றுக் கொள்ளாத இந்த கல்லூரியின் மாணவர்கள் பிற மாணவர் சங்கங்களோடு இணைந்து கல்லூரியை இடமாற்றக்கூடாது என்று  தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் ஆட்சியர் அலுவலகம் சென்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மாணவர்களின் போராட்டத்தினை அடுத்து  இன்று கல்லூரிக்கு விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் இன்று காலை கல்லூரியில் கூடிய மாணவ- மாணவிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த தகவல் கேள்விப்பட்டு நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தனது ஆதரவாளருடன் சென்று போராட்டத்தில் தானும் அமர்ந்து கொண்டார். 

கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது என்ற கோரிக்கையை திருவாரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அவர் ஏற்கெனவே மனுவாக அளித்துள்ளார். இந்த கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கேட்டு சட்டமன்றத்திலும் பேசியுள்ளார். அதனால் மாணவர்களின் போராட்டத்தில் இவரும் கலந்து கொண்டிருக்கிறார். மாணவர்களோடு வெகு நேரம் அமர்ந்திருந்து மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தந்த அவர் மாணவர்களிடம் பேசுகையில், "கடந்த அதிமுக ஆட்சியில் திருத்துறைப்பூண்டி, நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட இடங்களில் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. மற்ற இடங்களில் கட்டிடங்களும் கட்டப்பட்டுவிட்டன.  குடவாசலிலும் கட்டிடம் கட்டுவதற்கான வேலைகள் தொடங்கிய நிலையில் அதிமுக ஆட்சியிலிருந்து இறங்கிவிட்டது.

இந்நிலையில் இந்த கல்லூரியை  இடம் மாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். இவர்களுக்கு கொரடாச்சேரி அருகில் கல்லூரி தேவை என்றால் புதிதாக ஒரு கல்லூரியை அறிவித்து தொடங்க வேண்டியது தானே?  இந்த பகுதி நன்னிலம், கும்பகோணம் கொரடாச்சேரி உள்ளிட்ட பல இடங்களுக்கு மையமாக இருப்பதால் மாணவர்கள் எளிதில் வந்து செல்லவும், இந்த பகுதி மாணவர்கள் பயனடையும் வகையிலும் இந்த கல்லூரி உள்ளது.

இதனை இடமாற்றுவதால் இதில் பயிலும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவதிப்பட  வேண்டிய நிலை ஏற்படும்.  எனவே இந்த கல்லூரியை இடமாற்றக்கூடாது.  இங்குள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் கல்லூரி கட்டுவதற்கான நடவடிக்கைகளை  அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்" என்று காமராஜ் பேசினார்.

மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இறங்கிய முன்னாள் அமைச்சரின் செயலால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in