முன்ஜாமின் கேட்டு முன்னாள் அமைச்சர் மனு: வழக்கைக் கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல்

முன்ஜாமின் கேட்டு முன்னாள் அமைச்சர் மனு: வழக்கைக் கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல்

முன்னாள் அமைச்சர் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தனக்கு முன் ஜாமீன் கோரி கடலூர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அவரது ஆதரவாளர்கள் தமிழக அரசை கண்டித்து இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் உள்ளார். இவர் கடந்த ஆட்சியில் தொழில் துறை அமைச்சராக இருந்தபோது, இவரிடம் நேர்முக உதவியாளராக மேல் குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் இருந்து வந்தார். இவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்தது. 

இந்தப் பிரச்சினை தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத், அவரது அண்ணன் எம்.சி. தங்கமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் சில தினங்களுக்கு முன்பு, குமாரின் மாமனார் ராமச்சந்திரன் மற்றும் மாமியார் ஆகியோரை  அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்று இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவியை அமைச்சரின் ஆதரவாளர்கள் தாக்கியதாக சொல்லப்படுகிறது. 

இது குறித்து குமார் தரப்பில் அளிக்கப் பட்ட  புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸார் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், அவரது அண்ணன் எம்சி. தங்கமணி உட்பட 14 பேர் மீது  9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் எந்தவித விசாரணையும் இன்றி முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் உள்ளிட்டவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என அதிமுகவினர்  குற்றம்சாட்டி வந்தனர். 

இந்த நிலையில் இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூரில்  கருப்பு பேட்ச் அணிந்து முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மகன் எம்சிஎஸ்.பிரவீன் தலைமையில் திரண்ட அதிமுகவினர், எம்.சி.சம்பத் மீது திமுக அரசு பொய்யான வழக்கினை பதிவு செய்துள்ளது என்று முழக்கமிட்டவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.  இந்த நிலையில் அமைச்சர் எம்சி.சம்பத் முன்ஜாமின் கேட்டு கடலூர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in