அரசு வேலை வாங்கித் தருவதாக 16 லட்சம் மோசடி: சி.வி.சண்முகத்தின் உதவியாளர் கைது!

முகமது ஷெரீப்
முகமது ஷெரீப்

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரில்  முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உதவியாளர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உதவியாளராக இருந்தவர் திண்டிவனம் அருகே உள்ள சஞ்சீவராயன் பேட்டையை சேர்ந்த முகமது ஷெரீப். (45). இவர் விழுப்புரம் மாவட்ட அதிமுக ஊடகப் பிரிவு செயலாளராகவும் இருந்தார். இவர் கடந்த அதிமுக.ஆட்சியில் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் இருந்து  சுமார் 16 லட்ச ரூபாய் பணம் பெற்றதாக புகார்கள் எழுந்தன. ஆனால் வேலை வாங்கி தரவில்லையாம்.  

விழுப்புரம் சாலமேடு பகுதியைச் சேர்ந்த பழனிவேலு என்பவர் இது குறித்து விழுப்புரம்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரை விசாரித்த  மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சம்பத்குமார் தலைமையிலான போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து முகமது ஷெரீப்பை  நேற்று மாலை கைது செய்தனர். 

அவரிடம் விசாரணை நடத்திய பின்னர்  விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.   நீதிபதி ராதிகா முகமது ஷெரீப்பை பிணையில் விடுவித்து உத்தரவிட்டார். அமைச்சரின் உதவியாளர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in