முன்னாள் அமைச்சரின் மருமகன் தற்கொலை: காரணம் தெரியாமல் கலங்கும் குடும்பம்

சரவணன்
சரவணன்

அதிமுக முன்னாள் அமைச்சரின் மருமகன் தற்கொலை செய்துகொண்டது அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் காதி மற்றும் கதர்கிராமத் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் பாஸ்கரன். இவரின் மகள் சுமதி மற்றும் அவரது கணவர் சரவணன் ஆகியோர் அவர்களது இரு குழந்தைகளுடன் மதுரை கருப்பாயூரணி அருகே ஒத்தப்பட்டி பகுதியில் வசித்து வந்தனர்.

நேற்றிரவு சரவணன் தனது அறையில் தனியாகப் படுத்து உறங்கியுள்ளார். இன்று அதிகாலை அவரது மனைவி சுமதி சரவணனை எழுப்புவதற்காக அவரின் அறைக் கதவைத் தட்டியுள்ளார். நீண்ட நேரமாகத் தட்டியும் திறக்காத நிலையில் பயந்துபோன அவர் ஓடிப்போய் அருகிலுள்ள சரவணனின் சகோதரர் கர்ணனை அழைத்து வந்தார். அவரும் தட்டிப்பார்த்து கதவு திறக்காத நிலையில் கடப்பாரை மூலம் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே சரவணன் தூக்கிட்ட நிலையில் பிணமாகத் தொங்கினார். இதனையடுத்து கருப்பாயூரணி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வாளர் மோகன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரவணன் தற்கொலைக்கு குடும்பப் பிரச்சினை காரணமா, இல்லை வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எந்தப் பிரச்சினையும் இல்லாத நிலையில் சரவணன் இப்படி தற்கொலை செய்து கொண்டிருப்பதற்குக் காரணம் புரியாமல் அவரது மனைவி மற்றும் மாமனார் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in