முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகள் கைது: மகனின் தோழி அளித்த புகாரில் போலீஸார் அதிரடி

முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகள் ஸ்ருதி
முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகள் ஸ்ருதி

முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகளை போலீஸார் கைது செய்தனர். திலகவதியின் மகனுடைய தோழி அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

சென்னை கேகே நகர் பொன்னம்பலம் காலனியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் பிரபுதிலக். இவர் ஓய்வுபெற்ற முன்னாள் டி.ஜி.பி திலகவதியின் மகன். பிரபுதிலக்கிற்கு கடந்த 2007ம் ஆண்டு சேலத்தைச் சேர்ந்த ஸ்ருதி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பிரபுதிலக்கிற்கு ஒரு கோடி ரூபாய் , 170 சவரன் நகையை வரதட்சணையாக ஸ்ருதி குடும்பத்தார் வழங்கியதாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபு திலக்கிற்கு சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் இந்திரா பிரியதர்ஷினி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். இது தொடர்பாக ஏற்கெனவே சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்ருதி புகார் அளித்ததுடன், சைதாபேட்டை நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த 25ம் தேதி பிரபுவும், அவருடைய தோழி பிரியதர்ஷினியும், திருமங்கலத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலுக்குச் சென்று அங்கிருந்த உணவகம் ஒன்றில் உணவு அருந்தி கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது அங்கு தன்னுடைய குழந்தைகள் மற்றும் தாய், தந்தையுடன் வந்த ஸ்ருதி தன்னுடைய கணவர் அவருடைய தோழியுடன் இருந்ததைப் பார்த்ததும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது பிரியதர்ஷினிக்கும் ஸ்ருதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ருதி மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோர் மருத்துவர் பிரியதர்ஷினியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பிரியதர்ஷினி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

பின்னர் இதுகுறித்து பிரியதர்ஷினி, திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே ஸ்ருதியும் பிரியதர்ஷினி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருவரின் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

பின்னர் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்ததில் ஸ்ருதி அவரது தந்தை, தாய் ஆகிய 3 பேரும் சேர்ந்து பிரியதர்ஷினியை தாக்கியது பதிவாகி இருந்தது. இதனையடுத்து ஸ்ருதி அவரது தந்தை, தாய் உள்ளிட்ட 3 பேர் மீது பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல், ஆபாசமாகப் பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், இன்று ஸ்ருதியை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து ஸ்ருதி கூறுகையில், ’’பிரியதர்ஷினி மீது நானும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். ஆனால் போலீஸார் எனது புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என குற்றம்சாட்டினார். மேலும் ’’காலை 7.30 மணிக்கு 10க்கும் மேற்பட்ட போலீஸார் எனது வீட்டில் புகுந்து கைது செய்து விசாரணைக்கு என்னை அழைத்து சென்றனர். என்னுடைய மாமியார் திலகவதி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் செல்வாக்கைப் பயன்படுத்தி தன்மீது நடவடிக்கை எடுக்க வைத்துள்ளார். இரண்டு குழந்தைகளோடு, வீட்டில் தனியாக இருக்கும் என்னை போலீஸார் அத்துமீறி நுழைந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்று தன்னை தீவிரவாதி போல் நடத்தியுள்ளனர்’’ என்று குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து அவரது வழக்கறிஞர் சுப்ரியா, போலீஸார் முறையாக சம்மன் கொடுக்காமல் ஸ்ருதியை அழைத்துச் சென்றதாகவும், ஷாப்பிங் மாலில் சிசிடிவி கேமரா பதிவுகள் இருக்கும் நிலையில் அதனை ஆய்வு செய்தால் யார் தவறு செய்தார்கள் என்பது தெரியவரும். உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரை எங்கே அழைத்துச் செல்கிறார்கள் என்பதைக் கூட போலீஸார் சொல்ல மறுத்ததாக தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in