தந்தைக்கு கொடுத்த சபதத்தை நிறைவேற்றிய பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்

தந்தைக்கு கொடுத்த சபதத்தை நிறைவேற்றிய பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார். அவருக்கு வயது 82.

கடந்த சில வாரங்களுக்கு முன் சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்ற ஆபரேஷன் செய்த போது பெருங்குடலின் வலது பக்கத்தில் கேன்சர் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக ஆபரேஷன் செய்து கட்டி அகற்றப்பட்டது. பின் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் இருந்து மீண்ட பீலே, சமீபத்தில் சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். கேன்சர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் மீண்டும் அவர் அனுமதிக்கப்பட்டார். கேன்சர் சிகிச்சைக்காக இவருக்கு கீமோதெரபி சிகிச்சை தரப்பட்டது. பின் கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் அவதிப்பட, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

கால்பந்தாட்டத்தின் கடவுள், உலக கால்பந்தாட்டத்தின் கறுப்பு முத்து என்றெல்லாம் வர்ணிக்கப்படுபவர் பீலே. பிரேசிலில் 1940-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி ட்ரெஸ் கோரகோஸ் நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் பீலே. ஆரம்ப காலகட்டத்தில் தனது தந்தையுடன் கால்பந்தாட்டத்தை வெகுவாக ரசித்திருக்கிறார். தொலைக்காட்சிகள் இல்லாத அந்த காலகட்டத்திலேயே ரேடியோ கமென்ட்ரி மிகவும் பிரபலம்.

1950ம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி தோல்வியுற்றதை ரேடியோவில் கேட்டு தனது தந்தை அழுவதை தாங்கிக்கொள்ள முடியாத பீலே, கவலைப்படாதீங்கப்பா நான் பிரேசிலுக்காக விளையாடி கோப்பையை வசப்படுத்துவேன் என சூளுரைத்தார் அந்த 9 வயது சுட்டிச்சிறுவன் பீலே. தந்தையிடம் அளித்த சபதத்தை நிறைவேற்ற குடும்ப வறுமையை மீறி, ஷூ பாலிஷ் போட்டும், டீக்கடையில் வேலை செய்தும் சிரமப்பட்டு, சரியாக 8 ஆண்டுகளில் 1958-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்றார்.

காலிறுதிப் போட்டியில் பம்பரமாய் சுழன்ற பீலே, அரையிறுதியில் பிரான்சுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து வியக்க வைத்தார். இறுதிப்போட்டியில் ஸ்வீடனை 5-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக பிரேசில் அணி கோப்பையை வென்றது. இதனைத் தொடர்ந்து 1962, 1970 ம் ஆண்டுகளில் பீலே பங்கேற்று மொத்தம் 3 உலகக்கோப்பையை பிரேசிலுக்கு பெற்றுத் தந்து உலகின் கவனத்தை ஈர்த்தார்.

அடுத்தடுத்து உலகக்கோப்பை போட்டிகளில் பீலே அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 12. தனது வாழ்நாளில் பிரேசிலுக்காக 95 போட்டிகளில் விளையாடிய பீலே, 77 கோல்களை அடித்துள்ளார். கிளப் அணிகள் உட்பட முதல்தர கால்பந்து போட்டிகளில் அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை ஆயிரத்து 282. அவர் கால்பந்தாடி அரைநூற்றாண்டு கடந்த பின்னரும் அவரின் புகழ் உலகின் மூலை முடுக்கெல்லாம் எப்போதும் ஒலிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

3 முறை திருமணம் செய்துகொண்ட பீலேவுக்கு 7 குழந்தைகள் உள்ளனர். பீலேவின் மறைவுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ, எம்பாபே தொடங்கி முன்னணி கால்பந்து பிரபலங்களும், பல்வேறு துறைகளை சேர்ந்த சர்வதேச பிரபலங்களும் தங்கள் அஞ்சலியை தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in