3 ஆண்டாக பாழடைந்து கிடக்கும் அதிமுக முன்னாள் எம்.பி அலுவலகம்: கண்டு கொள்ளாத மதுரை மாநகராட்சி

3 ஆண்டாக  பாழடைந்து கிடக்கும் அதிமுக முன்னாள் எம்.பி அலுவலகம்: கண்டு கொள்ளாத மதுரை மாநகராட்சி

மதுரை மக்களவை தொகுதி முன்னாள் அதிமுக எம்.பி கோபாலகிருஷ்ணன் பயன்படுத்தி வந்த மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடம், தற்போது பயன்பாடு இல்லாமல் 3 ஆண்டாக பூட்டிக்கிடக்கிறது.

மதுரை மக்களவைத்தொகுதி எம்.பியாக கடந்த ஆண்டு வரை அதிமுகவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் இருந்து வந்தார். தல்லாகுளத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான கழிவு நீரோட்ட அலுவலகம் இருந்தது. அதிமுக ஆட்சியில் இருந்ததால் கோபாலகிருஷ்ணன், இந்த அலுவலக கட்டிடத்தைக் குறிப்பிட்ட வாடகைக்கு தனது எம்.பி அலுவலகமாக பயன்படுத்தி வந்தார். பாழடைந்து கிடந்த அலுவலகத்தை அவர் புதுப்பித்து ஹை டெக் அலுவலகமாக 5 ஆண்டுகள் பயன்படுத்தினார்.
அதன்பிறகு 2019-ம் ஆண்டில் நடந்த மக்களவைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.வி.ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்தியன் தோல்வியடைந்தார். திமுக கூட்டணியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் வெற்றிப்பெற்று எம்.பியானார்.

அவர் அதிமுக முன்னாள் எம்.பி கோபாலகிஷ்ணன் பயன்படுத்தி வந்த தல்லாகுளம் மாநகராட்சி கட்டிட அலுவலகத்தை தனது அலுவலகத்திற்குக் கேட்டார். அதற்கு அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவினர் முட்டுக்கட்டை போட்டதால் மாநகராட்சி நிர்வாகம், சு.வெங்கடேசனுக்கு அந்த அலுவலகத்தை தர மறுத்தது. நகரின் மையத்தில் இருப்பதால் மக்களைச் சந்திப்பதற்கு வசதியாக இருக்கும் என்பதால், இந்த அலுவலகத்தை பெற அப்போதைய மாநகராட்சி ஆணையாளர் விசாகனிடம் சு.வெங்கடேசன் போராடினார். ஆனால், அதிமுகவினர் நெருக்கடியால் அவரோ, அந்த கட்டிடத்தை ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் புதுப்பொலிவுப்படுத்தி மாநகராட்சியின் மற்றொரு பயன்பாட்டிற்குப் பயன்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார். இதனால் அதிருப்தியடைந்த சு.வெங்டேசனை வேறு வழியில்லாலமல் சமாதானம் செய்து அப்போதைய மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மங்கம்மாள் சத்திரத்தில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தை எம்.பி அலுவலகமாகப் பயன்படுத்த ஒதுக்கினார்.
தற்போது சு.வெங்கடேசனின் எம்.பி அலுவலகம் அந்த கட்டிடத்தில்தான் செயல்படுகிறது. ஆனால், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் புதுப்பித்து மாற்று பயன்பாட்டிற்குப் பயன்படுத்த உள்ளதாகக் கூறிய முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் பயன்படுத்தி வந்த மாநகராட்சிக்குச் சொந்தமான பழைய எம்.பி அலுவலகம் தற்போது வரை மறு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படவில்லை. மாறாக பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து 3 ஆண்டாக பூட்டியேக் கிடக்கிறது. அந்த அலுவலகம் முன் தற்போது இட்லி கடைகள், நடைபாதை கடைகள் வியாபாரம் கன ஜோராக நடக்கிறது. மேலும், இரு சக்கர வாகனங்களை ‘பார்க்கிங்’ செய்யவும் அப்பகுதி கடைகளுக்கு வரும் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கட்டிடம் முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுவோம். தற்போது இந்த கட்டிடத்தை சீரமைத்து, மாநகராட்சிக்குத் தேவையான அலுவலகமாக பயன்படுத்த ஆணையாளரிடம் கேட்க இருக்கிறோம். அவர் ஒப்புதல் வழங்கியதும், இப்பணி தொடங்கப்படும் ’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in