
புலித்தோல் பதுக்கி விற்பனை செய்த கும்பலிடம் வாடிக்கையாளர் போல் பேரம்பேசி வனத்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்த சம்பவம் குமரி மாவட்டத்தில் நடந்துள்ளது.
டெல்லி மத்திய வன உயிரின குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு நாகர்கோவிலில் புலித்தோல் விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அவர்கள் கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜாவுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு அந்தப் புலித்தோலை வாங்கும் வாடிக்கையாளர்கள் போல் அந்தக் கும்பலைத் தொடர்பு கொண்டனர். புலித்தோலை பதுக்கி வைத்திருந்த கும்பலும் வாடிக்கையாளர்கள் என நினைத்து அவர்களை நம்பினர். அப்போது வனத்துறையினர் அவர்களை தம்மத்துக்கோணம் பகுதிக்கு வருமாறு தெரிவித்தனர்.
அதன்படி அங்கே மோட்டார் சைக்கிளில் புலித்தோலுடன் வந்த இருவரை வனத்துறையினர் பிடித்தனர். அவர்களிடம் இருந்த புலித்தோலை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் குமரி மாவட்டம், நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்(36), தூத்துக்குடி டி.எம்.டி காலனியை சேர்ந்த இம்மானுவேல் தனராஜ்(34) என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 15 லட்சம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களது வாக்குமூலத்தின் அடிப்படையில் இவ்விவகாரத்தில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் ராஜா, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்தக் கும்பலின் மூளையாகச் செயல்பட்ட நாகர்கோவிலை சேர்ந்த செந்தில் சுப்பிரமணியன் தலைமறைவாகிவிட்டார். வனத்துறையினர் அவரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.