‘இந்தியா ஏன் இன்னமும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகிறது தெரியுமா?’

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சொன்ன விளக்கம்
‘இந்தியா ஏன் இன்னமும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகிறது தெரியுமா?’

உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்திருப்பதுடன், அந்நாட்டிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதைக் கணிசமாகக் குறைத்திருக்கின்றன. இந்தச் சூழலில், ரஷ்யாவிடமிருந்து முன்பைவிட அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்துவருகிறது இந்தியா. இவ்விஷயத்தில் மேற்கத்திய நாடுகளின் அதிருப்திக்கு ஆளானாலும், சலுகை விலையில் ரஷ்யாவின் எண்ணெய் கிடைப்பதால் இந்தியா அதைத் தொடர்ந்து மேற்கொள்கிறது. ஜூன் மாத நிலவரப்படி, 9.5 லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் இறக்குமதி செய்திருக்கிறது.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்த விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கும் இந்தியா, தகுந்த விளக்கங்களையும் அவ்வப்போது அளித்துவருகிறது. அந்த வகையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார்.

9-வது இந்தியா - தாய்லாந்து கூட்டுக் கமிஷன் கூட்டத்தில் கலந்துகொள்ள தாய்லாந்து தலைநகர் பாங்காக்குக்குச் சென்றிருக்கும் ஜெய்சங்கர், அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் நேற்று உரையாடினார். அப்போது, “எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை நியாயமற்ற வகையில் உயர்ந்திருக்கிறது. இந்தியாவுக்கு வழக்கமாக எண்ணெய் வழங்கிவந்த நாடுகள், தற்போது ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து குறைந்த அளவு எண்ணெய்யை மட்டுமே வாங்குவதால் ஐரோப்பாவுக்கே அதிக அளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்கின்றன. இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கிவந்த மத்தியக் கிழக்கு நாடுகள் உள்ளிட்ட நாடுகளிடமிருந்தே ஐரோப்பா தற்போது அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்கிறது” என்று அவர் கூறினார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

மேலும், “எண்ணெய் விலை அதிகரிப்பதைத் தவிர்க்க எந்த ஒரு நாடும் தனக்குச் சாதகமான ஒப்பந்தங்கள் கிடைப்பதை உறுதிசெய்யவே முயற்சிக்கும். அதைத்தான் இந்தியாவும் செய்கிறது” என்று அவர் கூறினார்.

இந்தியா தனது சொந்த நலன் குறித்த எந்த விஷயத்தையும் நேர்மையாகவும் வெளிப்படையாகவே மேற்கொள்வதாகச் சுட்டிக்காட்டிய அவர், “எனது நாட்டு மக்களின் தனிநபர் ஆண்டு வருமானம் 2,000 டாலர் தான். அதிக விலை கொடுத்து எண்ணெய் வாங்கும் நிலையில் அவர்கள் இல்லை. எனவே, இது தொடர்பாக சிறந்த ஒப்பந்தம் கிடைப்பதை உறுதிசெய்வது எனது தார்மிகக் கடமை” என்றும் குறிப்பிட்டார்.

இவ்விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பட்டை உணர்ந்திருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாது என்றும் அவர் கூறினார்.

இவ்விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி ஜெய்சங்கர் பேசுவது இது முதல் முறை அல்ல. பல்வேறு தருணங்களில் இதுகுறித்த உறுதியான கருத்தை அவர் பதிவுசெய்திருக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்கு 2+2 அமைச்சர்கள் சந்திப்பு எனும் அடிப்படையில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின் ஆகியோரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயங்கரும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சந்தித்துப் பேசினர். அப்போது ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த ஜெய்சங்கர், “ரஷ்யாவிமிருந்து ஒரு மாதம் முழுக்க இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெய்யின் அளவு, அந்நாட்டிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் ஒரு நண்பகலில் இறக்குமதி செய்யும் எண்ணெய்யைவிட குறைவுதான்” என அதிரடியாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in