கேரளத்தில் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாததால் வீட்டில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதை அவமானமாகக் கருதி கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், சூரநாடு திரிகுன்னபுழா பகுதியைச் சேர்ந்தவர் அஜிகுமார். இவரது மனைவி ஷாலினி. இந்தத் தம்பதியினரின் மகள் அபிராமி கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இவர், கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். அண்மையில் கல்லூரிக்கு விடுப்பு எடுத்துவிட்டு வீட்டுக்கு வந்திருந்தார். அஜிகுமார் கேரள வங்கி என்னும் மாநில அரசின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கியில் இருந்து பத்து லட்ச ரூபாய் கடன் பெற்று இருந்தார். அஜிகுமார் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்குப் பின்பு வேலை இழந்து கேரளம் திரும்பினார்.
அதேநேரத்தில் அஜிகுமாரின் தந்தையும் உடல்நிலை சரியில்லாமல் படுக்கை நிலைக்குப் போனார். இதனால் அவரது சிகிச்சைக்கும் பெருந்தொகை செலவானது. இதனால் வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. ஏற்கெனவே ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தைக் கட்டியிருந்த நிலையில் எஞ்சிய பணத்தைக் கட்ட கால அவகாசம்கேட்டு அஜிகுமாரும், அவரது மனைவி ஷாலினியும் வங்கியை வலியுறுத்தினர். இவர்கள் இதற்காக வங்கிக்கு சென்றிருந்த நேரத்திலேயே வங்கி சார்பில் வீட்டிற்கு சில வங்கி அதிகாரிகள் வந்தனர். அவர்கள் அஜிகுமாரின் வீடு வாங்கிய கடனுக்காக ஜப்தி செய்யப்படுவதாக நேற்று மாலையில் பதாகை வைத்தனர்.
இதைப் பார்த்த அஜிகுமாரின் மகள் அபிராமி அவமானமாகக் கருதி வீட்டிற்குள் போய் தற்கொலை செய்து கொண்டார். வங்கி தரப்பில் இருந்து பதாகை வைக்க வந்தபோதும் அருகாமை வீட்டினர், கொஞ்சம் அவகாசம் தருமாறு கேட்டனர். ஆனால் வங்கியினர் பதாகை வைப்பதில் பிடிவாதமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. கூட்டுறவு வங்கி கொடுத்த கடனை வசூலிக்கக் கொடுத்த அழுத்தம் கல்லூரி மாணவியின் உயிரிழப்பிற்கு காரணமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.