கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றது. அத்துடன் 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துறைக்கு அது உத்தரவிட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடி எம்.எம் கார்டன் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா (17) வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த மாதம் 28-ம் தேதி பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பிரியா
பிரியா

அங்கு மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம்சங்கர் ஆகியோர் மாணவி பிரியாவுக்கு முட்டியில் சவ்வு அறுவை சிகிச்சை செய்தனர். இதன் பின் பிரியாவின் உடல்நிலை மோசமடைந்தது. இதனால் கடந்த 8-ம் தேதி மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரியா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் பிரியாவுக்கு காலில் ரத்தம் ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டதால் அவரது முழங்கால் பகுதி வரை அகற்றப்பட்டது. தவறான சிகிச்சையால் தான் மாணவி பிரியாவின் கால் அகற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தவறான சிகிச்சை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர்கள் சோமசுந்தரம் மற்றும் பால் ராம்சங்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக குடும்பத்தாரிடம் புகாரை பெற்று பெரவள்ளூர் போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது பிரியா மரணம் தொடர்பாக அலட்சியமான மருத்துவப் போக்கினாலும், தவறான சிகிச்சையினாலும் உயிரிழந்துள்ளாரா என விளக்கமளித்து அறிக்கை அளிக்கும் படி மக்கள் நலவாழ்வுத்துறைக்கு சென்னை காவல்துறை சார்பில் கடிதம் அனுப்பினர். மக்கள் நலவாழ்வுத்துறை அளிக்கும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையிலேயே சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போலீஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையே மருத்துவமனையில் மாணவி பிரியாவின் உடலை வாங்க மறுத்து சக மாணவர்கள் மற்றும் குடும்பத்தார் தரப்பில் போராட்டம் நடைபெற்ற நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து உடலை பெற்று சென்று அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் கால்பந்து வீராங்கனை பிரியா வழக்கை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. மேலும் பிரியா மரணம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in