அலட்சிய மருத்துவர்கள் மீது என்ன நடவடிக்கை?

- இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் ஆர்.பழனிசாமி பேட்டி
ஆர்.பழனிசாமி
ஆர்.பழனிசாமி

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக சென்னை பெரியார் நகர் அரசு மருத்துமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் சோமசுந்தர், எலும்பு முறிவுத்துறை உதவிப் பேராசிரியர் பால்ராம் சங்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மருத்துவர்களின் அஜாக்கிரதை மற்றும் தவறான சிகிச்சையாலேயே பிரியா உயிரிழந்திருப்பதாக உறுதியானது. இதையடுத்து அந்த 2 மருத்துவர்கள் உட்பட 5 பேர் மீது, அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவர்களின் இந்த அஜாக்கிரதைத்தனம் பொதுமக்கள் மத்தியில் கடும் விவாதப் பொருளாகி இருக்கிறது. மாணவி பிரியாவின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், மருத்துவமனைக்கோ, மருத்துவர்களுக்கோ பொதுமக்களால் ஏதேனும் பிரச்சினை ஏற்படும் போது பொங்கிவெடிக்கும் மருத்துவர் சங்கங்கள் இந்த விஷயத்தில் பொறுப்பற்ற மருத்துவர்களின் செயலைக் கண்டிக்காமல் மௌனம் காப்பது சரிதானா என்ற கேள்வியையும் பொதுமக்கள் தரப்பில் எழுப்புகிறார்கள். இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளையின் தலைவர் ஆர்.பழனிசாமியிடம் பேசினோம்.

மாணவி பிரியாவின் மரணம் மற்றும் தவறான சிகிச்சையளித்த மருத்துவர்கள் மீதான நடவடிக்கை குறித்த உங்கள் கருத்து?

மாணவி பிரியாவின் மரணம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவரின் மரணம் அரசு மருத்துவமனையில் நடந்தது என்பதால், அரசு இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது. காவல்துறையும் இதில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், அந்த மாணவியின் அறுவை சிகிச்சை, அதனால் ஏற்பட்ட விளைவுகள், மரணம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து மருத்துவக்குழு விசாரணை நடத்துகிறது. அதன் முழுமையான அறிக்கை வந்த பின்னரே இதன் மருத்துவக் காரணங்கள் என்னவென்று சொல்ல முடியும்.

அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க உங்களின் அறிவுரை?

மாணவி பிரியாவுக்கு சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அந்த மருத்துவமனையில் முழுமையான வசதிகள் இருந்ததா என்று நமக்குத் தெரியாது. எனவே, இதுபோன்ற சிக்கலான அறுவை சிகிச்சைகளை சிறிய மருத்துமனைகளில் செய்யாமல், பெரிய தலைமை மருத்துவமனைகளில் செய்யலாம் என்பது எனது கருத்து. சென்னையிலேயே உயர்தர வசதிகள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களுடன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துமனை, ஸ்டான்லி மருத்துமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை போன்றவை உள்ளன. அங்கு இதுபோன்ற சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்வது பொருத்தமாக இருக்கும்.

பிரியா.
பிரியா.

மருத்துவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் உடனே இந்திய மருத்துவ சங்கம் போராடுகிறது. அதுபோல தவறான சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவீர்களா?

மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய மருத்துவ சங்கத்துக்கு அதிகாரம் இல்லை. ஆனால், தவறான சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மீது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்கும். அரசு மருத்துவமனைகளில் நடக்கும் தவறுகள் குறித்து தமிழக மருத்துவத் துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய மருத்துவ சங்கத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு மண்டலத்திலும் கூட்டம் நடத்துகிறோம். அதில், மருத்துவர்கள் தற்போதைய சூழலில் எப்படி நடந்துகொள்ளவேண்டும், எதுபோன்ற சிகிச்சைகள் அளிக்க வேண்டும், எப்படி அறுவை சிகிச்சை செய்யவேண்டும், புதிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்தெல்லாம் மருத்துவர்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

அரசு மருத்துவமனைகள் இன்னமும் மோசமான நிலையில் உள்ளதாக சிலர் குற்றம்சாட்டுகிறார்களே?

உண்மையில் இப்போது அரசு மருத்துவமனைகள் மிகவும் மேம்பட்ட நிலையில் உள்ளது. தலைமை மருத்துவமனைகள் முதல், ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை உள்ள அனைத்து அரசு மருத்துமனைகளும் தரம் உயர்த்தப்பட்டுவிட்டது. அதுபோல மருத்துவப்பணியாளர்கள் கிராமங்கள் தோறும் சென்று சிகிச்சையளிக்கிறார்கள். இதிலெல்லாம் எந்தக் குறையும் சொல்லவே முடியாது. எனினும் ஏதாவது ஒரு இடத்தில் இதுபோல தவறுகள் நடந்துவிடுகிறது. தினமும் அரசு மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் நடக்கின்றது. அதில் மிக அரிதாக இதுபோன்ற மரணம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளையும் குற்றம்சொல்லமுடியாது.

மா. சுப்பிரமணியன்
மா. சுப்பிரமணியன்

இதுபோன்ற சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது மருத்துவர்கள் என்ன செய்யவேண்டும்?

மிகச் சிக்கலான அறுவை சிகிச்சைகளின்போது மருத்துவர்கள், நோயாளிகளிடம், சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் எப்படி ஓய்வெடுக்க வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதுபோன்ற வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். ஏனென்றால், நோயாளிகள் அந்த வழிகாட்டுதல்களை மீறும்போதும் அசம்பாவிதங்கள் நடக்கலாம்.

பொதுவாகவே தற்போது தவறான சிகிச்சை குறித்த புகார்கள் அதிகம் வருகிறதே..?

அறுவை சிகிச்சைக்கு முன்னதாக எப்போதுமே நோயாளியிடம், அவர்களுக்கு உள்ள வியாதியின் தாக்கம் என்ன, இதற்காக அறுவை சிகிச்சை அல்லது உரிய சிகிச்சையளிக்கும்போது என்னென்ன விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை விளக்கமாக சொல்லி ஒப்பந்தக் கடிதம் பெற வேண்டும். அதுபோல, மயக்க மருந்து கொடுக்கும்போது இளம் வயதினர் சிலருக்குக்கூட மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனையெல்லாம் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினரிடம் விளக்கமாக படித்துக் காண்பிக்க வேண்டும். இது தொடர்பான விவரங்களை தெரிவித்து கூடுமானவரையில் நோயாளியிடமே கையெழுத்து வாங்கவேண்டும்.

முடியாத பட்சத்தில் ரத்த உறவுகளிடம் கைரேகையுடன் கையெழுத்து வாங்க வேண்டும். மிகச் சிக்கலான சமயங்களில் வீடியோ பதிவு செய்வதும் நல்லது. இதுபோல செய்யும் பட்சத்தில் சிகிச்சையில் சந்தேகம் எழுப்புவதை தவிர்க்க முடியும். அனைத்து மருத்துவர்களும் இதனை கடைபிடிக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் தொடர்ந்து வலியுறுத்துகிறது.

அதுபோல, நோயாளியின் சிகிச்சை குறித்த ஒவ்வொரு நடவடிக்கையையும் முற்றிலுமாக பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும். அவ்வாறு பதிவு செய்யும் சிகிச்சை விவரங்களை தொடர்ந்து நோயாளிகளிடம் தெரிவிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு தெளிவான புரிதல் ஏற்படும். சிகிச்சை குறித்து மக்களுக்கு புரிதல் ஏற்பட்டாலே இதுபோன்ற புகார்கள் எழாது. விருப்பப்படும் பட்சத்தில் உயர்சிகிச்சைக்கு வேறு மருத்துவமனைக்கு செல்லும் வாய்ப்பினையும் நோயாளிகளுக்கு வழங்க வேண்டும்.

மருத்துவர்களுக்கு இத்தனை வழிகாட்டல்கள் இருந்தும் ஏன் இதுபோன்ற மரணங்கள் நிகழ்கிறது?

மிகவும் தரம் வாய்ந்த மருத்துவமனைகளில், அனைத்து வசதிகளுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில்கூட யாரோ ஒருவருக்கு உயிரிழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மருத்துவத்துறையில் இதையெல்லாம் தவிர்க்கவே முடியாது. இதனை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மருத்துவர்களின் மீது குறை சொல்லக்கூடாது. உதாரணத்துக்கு, குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தாலும்கூட, மிக அரிதாக மீண்டும் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, மீண்டும் கர்ப்பம் தரித்தால் அதனை தவறான சிகிச்சை எனச் சொல்ல முடியாது.

அதுபோல அறுவை சிகிச்சை செய்யும்போது திடீரென மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளது. எழும்பு அறுவை சிகிச்சை செய்யும்போது ‘எம்பாலிசம்’ எனும் ரத்தம் உறைந்த கட்டியால் உயிரிழப்புக்கூட ஏற்படலாம். இதுபோல நிறைய சிக்கல்கள் உள்ளது.

விபத்தில் அடிபடும் ஒருவர் தலையில் காயத்துடன் வருவார். அவருக்கு நாம் அதற்கு சிகிச்சையளிப்போம். ஆனால், அவருக்கு வயிற்றில் வெளியில் தெரியாமலேயே பலமான உள்காயம் இருந்து, ரத்தக்கசிவு ஏற்பட்டால் உயிரிழப்பு கூட நடக்கலாம். இதுபோன்ற நேரங்களில் மருத்துவர்கள் மீது குறைகூறி பிரச்சினை செய்தால், அடுத்தடுத்து இதுபோன்ற அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவே மருத்துவர்கள் அச்சப்படுவார்கள்.

மருத்துவர்கள் ஒரு உயிரைக் காப்பாற்றத்தான் போராடுவார்கள். யாருமே ஒரு உயிரை எடுக்க நினைக்க மாட்டார்கள். ஒரு நோயாளி அவசர சிகிச்சைக்கு வரும் போது, அந்த அவசரத்தை உணர்ந்துதான் சிகிச்சையளிப்பார்கள். ஒருவேளை, அவருக்கு ஏற்கெனவே இருக்கும் இணை நோயை நம்மிடம் சொல்லவில்லை என்றால், அதனாலும் அசம்பாவிதம் ஏற்படலாம். இதுபோன்ற சிக்கல்களையெல்லாம் பொதுமக்களும் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். அரசும் தவறான சிகிச்சை குறித்த புகார்கள் வரும்போது, மூத்த மருத்துவர்களைக் கொண்ட குழுவை அமைத்து முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in