லஞ்சம் வாங்கி சிக்கிய சக அதிகாரி: உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எடுத்த அதிரடி முடிவு

லஞ்சம் வாங்கி சிக்கிய சக அதிகாரி: உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எடுத்த அதிரடி முடிவு

சென்னையில் லஞ்சம் வாங்கிய  உணவு பாதுகாப்பு அலுவலர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 'லஞ்சம் தவிர்ப்போம் மக்கள் நலன் காப்போம் என்று உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின்  சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

சென்னை ராயப்பேட்டையில் உணவகம் ஒன்றில் ஓமப்பொடியில் கெமிக்கல்  அதிகமாக இருந்ததாக கூறி 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட திருவல்லிக்கேணி உணவு பாதுகாப்பு அலுவலர் பாஸ்கரன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். அதனையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கையில், அன்புத் தோழர்களே வணக்கம்! நேற்று சென்னையில் நடைபெற்ற நமது தோழர் பாஸ்கரன்  நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது. வருத்தமாக உள்ளது.  வேறு துறைகளில் நடைபெறும் நிகழ்வுகள் சில தனிப்பட்ட நபர்களை மட்டும் பாதிப்பதாக மட்டுமே இருக்கும். ஆனால் நமது உணவு பாதுகாப்பு துறையில் நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள் மக்களுக்கு பாதுகாப்பான உணவு கிடைப்பதே கேள்விக்குறியாக மாற்றிவிடுமோ என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதாக ஆகிவிடும். 

அதிலும் குறிப்பாக கடந்த ஆட்சி காலத்தில், உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி நியமிக்கப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களின் நலனுக்காக எதுவும் செய்யாமல்,  குறைந்தபட்சம் சட்ட விதிகளின்படி உள்ள உரிமையைக்கூட வழங்க மறுத்து வந்தார்கள்.

ஆட்சி மாற்றத்தால், நம் உரிமைகளை மதித்து, மக்கள் நலனுக்காகவும் நமது நலனுக்காகவும்  செயல்களை முன்னெடுக்கும்  மாண்புமிகு முதல்வர், அமைச்சர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர்  ஆகியோர் கருணையுடன் செயல்பட்டு வரும் இன்றைய சூழலில் இதுபோன்று வரும் செய்திகள் நமக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களும்  உணர்ந்து செயல்படுவதே நமது நலனுக்கும் மக்கள் நலனுக்கும் உகந்தது.'லஞ்சம் தவிர்ப்போம்! மக்கள் நலன் காப்போம்!' என்று கேட்டுக் கொண்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in