
10 நிமிடங்களில் உணவை வழங்கும் சேவையை நிறுத்தி உள்ளதாக சொமோட்டோ அறிவித்திருக்கிறது.
வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த 10 நிமிடத்திற்குள் அவர்களுக்கு உணவு விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொமோட்டோ நிறுவன தலைமை அதிகாரி கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. வாடிக்கையாளர்களுக்கு வேகமாக உணவு வழங்க வேண்டும் என்பதற்காக பணியில் உள்ளவர்கள் அதிவிரைவில் சாலையில் பயணிக்க வேண்டி இருக்கும் என்றும் இதனால் போக்குவரத்து விதிமீறல்கள் ஏற்பதுடன் சாலை விபத்துக்கள் அதிகரிக்க கூடும் என்றும் அச்சம் எழுந்தது.
இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறையும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்டிருந்தது. சென்னையில் இந்த சேவை இல்லாத நிலையில் டெல்லி, குல்கிராம், பெங்களூரு ஆகிய நகரங்களில் சோதனை ஓட்டமாக அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், 10 நிமிடங்களில் உணவை வழங்கும் சேவையை நிறுத்தி உள்ளதாக சொமோட்டோ அறிவித்திருக்கிறது. இதற்கு பதிலாக தங்கள் வர்த்தகத்தை புதிதாக மாற்றி அமைப்பதோடு ரெஸ்டாரண்டுடன் இணைந்து புதிய மெனுவை உருவாக்க உள்ளோம் என்றும் சொமோட்டோ அறிவித்துள்ளது. 10 நிமிடங்களில் உணவை டெலிவரி செய்யும் சேவையை 3 நகரங்களில் சோதனை ஓட்டமாக சொமோட்டோ அமுல்படுத்திருந்த நிலையில் ஓராண்டுக்கு பிறகு இந்த சேவையை தற்போது நிறுத்தியுள்ளது.