
நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வாசலில் உணவு விநியோக ஊழியருக்கும், வாயிற்காவலருக்கும் இடையே நடந்த மோதல் காட்சிகள் வைரலாகியிருக்கின்றன.
ஆன்லைன் செயலிகள் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகம் செய்வதற்காக சாலையில் அதிவேகத்தில் சென்று போக்குவரத்துக் காவலர்களிடம் பலர் சிக்கிக்கொள்கிறார்கள். தாமதமாகச் சென்றால் அதைக் காணொலியாக்கி வைரல் செய்யும் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள். சில நேரங்களில் சில உணவு விநியோக ஊழியர்களும் பிரச்சினைக்குத் தொடக்கப்புள்ளி வைத்துவிடுகிறார்கள்.
அதேபோல், அடுக்குமாடிக் குடியிருப்புகள், நிறுவனங்களின் வாயிற்காவலர்களும் இப்படி அடிக்கடி பிரச்சினையில் சிக்குகிறார்கள். வாயிற்காவலர்கள் குடியிருப்புவாசிகளால் தாக்கப்படும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. டெல்லி அருகே உள்ள குருகிராம், நொய்டா போன்ற இடங்களில் சமீபத்தில் இதுபோன்ற சம்பவங்கள் பரபரப்பாகப் பேசப்பட்டன.
இந்நிலையில், நொய்டாவின் செக்டர் 46 பகுதியில் உள்ள கார்டெனியா சொஸைட்டி குடியிருப்பின் வாசலில், ஸொமேட்டோ நிறுவன ஊழியரான சபி சிங்குக்கும், வாயிற்காவலர் ராம் வினய் சர்மாவுக்கும் இடையில் நடந்த அடிதடி சமூகவலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.
வளாகத்துக்குள் சபி சிங்கை அனுமதிக்க முடியாது என ராம் வினய் சர்மா கூறியதால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரிடம் கோபமாகப் பேசிய சபி சிங் ஒரு கட்டத்தில் அவர் மீது தாக்குதல் நடத்தினார். ராம் வினய் சர்மாவும் திருப்பித் தாக்கினார். அருகில் இருந்தவர்கள் இந்தச் சண்டையை விலக்கிவிட முயன்றனர். எனினும், இருவரும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து போலீஸுக்கு சிலர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இருவரையும் கைதுசெய்தனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.