புதுச்சேரியில் களைகட்டியது உணவு, ஒயின் திருவிழா: மது பிரியர்கள் குதூகலம்

விழாவை தொடங்கி வைக்கும் தமிழிசை சௌந்தரராஜன்
விழாவை தொடங்கி வைக்கும் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி மாநிலத்தில் உணவு மற்றும் ஒயின் திருவிழா இன்று தடபுடலாக தொடங்கியது. உலகத்தின் விதவிதமான ஒயின்கள் மற்றும் உணவுகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் மது மற்றும் உணவுப் பிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

உலகில் ஒவ்வொன்றிற்காகவும் ஒரு விழா நடத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான் தமிழகத்தில் உணவுத்திருவிழா, சாரல்விழா உட்பட பல்வேறு வகையான விழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் அருகில் உள்ள புதுச்சேரியில் அப்படி சிறப்பான விழாக்கள் ஏற்பாடு செய்யப்படுவதில்லை. புதுச்சேரிக்கு சென்று வருவது ஒரு சிறப்பான ஏற்பாடு என்றுதான் மக்கள் மகிழ்வார்கள்.

வார இறுதி நாட்களில் புதுச்சேரிக்கு வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தருகிறார்கள். அவர்களை மகிழ்விக்கும் விதமாக அவர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும் வகையில் இந்த உணவு மற்றும் ஒயின் திருவிழா நடைபெறுகிறது.

இன்று தொடங்கி நாளை, நாளை மறுதினம் ஆகிய மூன்று தினங்கள் வெகு சிறப்பான முறையில் இந்த திருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் புதுச்சேரியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக இந்த திருவிழா பழைய துறைமுக வளாகத்தில் நடைபெறுகிறது.

‘PONDY FOOD FETE 2022’ என்ற பெயரில் நடக்கும் இந்த உணவு மற்றும் ஒயின் திருவிழாவில் மது பிரியர்களை குதூகலப்படுத்தும் விதமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒயின் வகைகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல புதுச்சேரியில் உள்ள பிரபல ஹோட்டல்கள் கலந்து கொண்டு விதவிதமான உணவுகளை விருந்து படைக்க உள்ளன. மேலும் இசைக் கச்சேரி, மேஜிக் ஷோ, விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இன்று மாலை நடைபெற்ற தொடக்க விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். உள்ளூர் மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

தொடக்க நாளான இன்று குறைவான அளவில் கூட்டம் இருந்தாலும் நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள் என்பதால் நாளை முதல் உணவு மற்றும் ஒயின் திருவிழா களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படம்: எம்.சாம்ராஜ்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in