குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்: குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

 குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்: குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தென்காசி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது மேலும் அருவிகளின் நகரம் என போற்றப்படும் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து இரண்டாவது நாளாக இன்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குற்றாலம் மெயின் அருவிலும், பழையகுற்றாலம் அருவியிலும் காட்டாற்று வெள்ளம் உருவாகி உள்ளது. மேலும் பழைய குற்றாலம் அருவி நீரில் வனப்பகுதியில் இருந்து ஊர்வன வகையைச் சேர்ந்த உடும்பு வெள்ளத்தில் அடித்து வரப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறை ஊழியர் உடும்பை பத்திரமாக மீட்டார். மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதியிலிருந்து ஏராளமான ஊர்வன  வகையைச் சார்ந்த மலைப்பாம்பு, உடும்பு உள்ளிட்டவைகள் வெள்ளத்தில் அடித்து வரப்படுகின்றன, குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி முதல் பாலத்தை ஒட்டி காட்டாற்று வெள்ளம் கொட்டி வருகிறது.

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பலரும் குற்றாலத்திற்கும் வந்து செல்வது வழக்கம். அவர்கள் குற்றாலம் அருவியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் குளிக்கத் தடைவிதித்ததால் சோகத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in