டெல்லியில் புழுதிப்புயல் வீசியதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
டெல்லியில் நேற்று இரவு திடீரென புழுதிப்புயல் வீசியது. பலத்த காற்றுடன் ஒரு சில இடங்களில் மழையும் பெய்தது. டெல்லியின் பல பகுதிகள் நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் 60 கிலோமீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திற்கு புழுதிப்புயல் வீசியது.
இந்த புழுதிப் புயல் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தங்கள் வாகனங்களை இயக்க முடியாமல் அப்படி அப்படியே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் குடிசை வீடுகள் பாதிப்படைந்தன. மேற்கூரைகள் பறந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன.
வானுயுர எழுந்த புழுதிப்புகையால் டெல்லி விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. டெல்லி வரவேண்டிய விமானங்கள் மோசமான வானிலை காரணமாக வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன. டெல்லி விமான நிலையத்தில் இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் உட்பட ஒன்பது விமானங்கள், நகரின் வானிலையில் திடீர் மாற்றம் காரணமாக ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லியில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான தீவிரம் கொண்ட மழை மற்றும் 40-60 கி.மீ/மணி வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 3.1 கி.மீ உயரத்தில் ஈரானில் ஏற்பட்ட சூறாவளி சுழற்சியே இந்த புழுதிப் புயலுக்குக் காரணம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக ஏற்கெனவே இந்திய வானிலை ஆய்வு மையம் பல அறிவுறுத்தல்களையும், எச்சரிக்கைகளையும் கொடுத்திருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பாகவே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
புழுதிப்புயல் தொடர்ந்து வீசி வரும் நிலையில் மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு மாநில அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.