சென்னையில் தொடர் மழை: 8 விமான சேவை ரத்து

சென்னையில் தொடர் மழை: 8 விமான சேவை ரத்து

தொடர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய 8 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாகச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் 3 நாட்களுக்குத் தமிழகம், புதுவையில் கன மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை பொது விடுமுறை என்பதால் மக்கள் நடமாட்டம் சென்னையில் வெகுவாக குறைந்துள்ளது.

சென்னை மாநகரம் முழுவதும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்களை இயக்குவதற்கு பெரும் சிரமம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

கனமழை காரணமாகச் சென்னை விமான நிலையத்திலிருந்து செல்லக் கூடிய 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, ஐதராபாத், கர்னூல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in