
திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து நாளிதழ் வடிவில் நண்பர்கள் அடித்த பிளக்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கோதைமங்கலத்தைச் சேர்ந்தவர் கௌதம். இவர் சென்னையைச் சேர்ந்த வினித்தாவை காதலித்து வந்த நிலையில், இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பழனியில் நடைபெற்றது.
திருமணத்திற்கு கௌவுதமின் நண்பர்கள் நாளிதழ் போன்று வித்தியாசமான முறையில் பிளக்ஸ் பேனரை வடிவமைத்து வைத்தனர். நாளிதழில் வரும் தலைப்பு செய்தி, விளையாட்டு செய்தி போன்ற வாசகங்களுடன், மணமகன், மணமகள் மற்றும் நண்பர்கள் படங்களை குற்றவாளிகள் போன்றும் வடிவமைத்து நண்பர்கள் வைத்த பிளக்ஸ் திருமணத்திற்கு வந்த உறவினர்களைக் கவர்ந்தது. மேலும், இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த பிளக்ஸில், "ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது" என்ற தலைப்புடன், திருமண சட்டப்படி, கோதமங்கலத்தைச் சேர்ந்த கௌதம் என்பவர் சென்னையைச் சேர்ந்த வினித்தாவை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்த குற்றத்திற்காக 29.08.2022 அன்று பெற்றோர்களால் திருமணம் (ஆயுள் தண்டனை) செய்து வைக்கப்படுகிறது" என்று அடித்து விட்டு, திருமணம் ஆகாத நண்பர்களுக்கு பெண்கள் தேவை என்று கல்யாணமாலை உள்ளிட்டவை அச்சிடப்பட்டுள்ளது.