ஆருத்ரா தரிசன விழா: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்

கொடியேற்றம்
கொடியேற்றம்

சைவர்களின் கோயில் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் புகழ் பெற்றதும் பாரம்பரியமானதுமான   ஆருத்ரா தரிசன விழா இன்று காலை  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் கடலூர் மாவட்டம்  சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழாவும் மார்கழி திருவாதிரை விழாவும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.  மார்கழி மாதம் திருவாதிரை விழா ஆருத்ரா தரிசனம் என்ற பெயரில் மிக விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்தாண்டுக்கான ஆருத்ரா தரிசன  விழா கொடியேற்றத்துடன் இன்று  தொடங்கியது.  நடராஜர் கோயில் சன்னதிக்கு எதிர்ப்புறத்தில் உள்ள கொடிமரத்தில் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில்  உற்சவ ஆச்சாரியார் நடராஜ தீட்சிதர் கொடியினை ஏற்றி விழாவை  தொடங்கி வைத்துள்ளார். அதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று  தரிசனம் செய்து வருகின்றனர். 

இதனைத் தொடர்ந்து நாள்தோறும்  பஞ்சமுக மூர்த்திகள் வீதி உலா பல்வேறு வாகனங்களில்  நடைபெற உள்ளது. 11 நாட்கள் நடைபெறும் விழாவில்  முக்கிய நிகழ்வாக  9-ம் நாள் திருவிழாவான தேரோட்டம் ஜனவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது, 10-ம் நாள்  திருவிழாவாக கருதப்படும் ஆருத்ரா தரிசனம்  ஜனவரி 6-ம் தேதி மதியம் 2 மணியளவில்  நடைபெற உள்ளது. அப்பொழுது நடராஜ பெருமான் சிவகாமி சுந்தரி தாயாருடன் நடனம் ஆடிய படியே பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் புரிய உள்ளனர். 

கடந்த இரண்டு  ஆண்டுகளை விட இந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகள் எதுவும் அதிகம் இல்லாததால்  பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள்,  வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான  பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in