உளுந்தூர்பேட்டையில் கத்தியைக் காட்டி மிரட்டிய ரவுடிகள் சென்னையில் கைது: 24 மணி நேரத்தில் போலீஸ் அதிரடி!

உளுந்தூர்பேட்டையில் கத்தியைக் காட்டி மிரட்டிய ரவுடிகள் சென்னையில் கைது: 24 மணி நேரத்தில் போலீஸ் அதிரடி!

உளுந்தூர்பேட்டை அருகே பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு  பெட்ரோல் பங்க்,  டாஸ்மாக் மற்றும் விவசாயியின்  வீடு என அடுத்தடுத்த இடங்களில் தகராறு செய்த ஐந்து  பேரை சென்னை வரை தேடிச்சென்று கைது செய்துள்ளனர் திருநாவலூர் போலீஸார்.

உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட  தொப்பையான்குளம் கிராமத்தில் வசித்து வரும் பரமசிவம் மகன் சிவராஜ் (30).  இவர்  கடந்த 30-ம் தேதி தனது முந்திரி தோப்பிற்குச் சென்றபோது அங்கு இரண்டு பெண்களுடன் மூன்று இளைஞர்கள் அரைகுறை ஆடையுடன் போதையில் இருந்ததைக் கண்டு தட்டி கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் சிவராஜிடம் தகராறு செய்திருக்கின்றனர்  

அவர்கள் வியங்குப்பம் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவரின்  உறவினர்கள் என்பதால்  மகாலிங்கம் மற்றும் அவரது தரப்பினர் சிவராஜ் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து திருநாவலூர் காவல் நிலையத்தில் சிவராஜ் புகார் கொடுத்தார். சிவராஜிடம் தகராறு செய்தவர்கள் ஏற்கெனவே அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் பட்டாக்கத்தியை காட்டி தகராறு செய்திருப்பதும், அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஆட்டோவுக்கு  பெட்ரோல் நிரப்பி கொண்டு பணம் தராமல் பட்டாக்கத்தியை  காட்டி மிரட்டியதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. பெட்ரோல் பங்கில் ஆட்டோவில் இருந்து பட்டாக்கத்தியுடன் அவர்கள் இறங்கி வந்து பெட்ரோல் பங்க் ஊழியரை மிரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படி பல்வேறு இடங்களில் கத்தியை காட்டி பிரச்சினையில் ஈடுபட்டது சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஹரிஹரசுதன் என்பதும் மற்றவர்கள் அவருடன் சென்னையில் இருந்து வந்தவர்கள் என்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

திருநாவலூர் காவல் ஆய்வாளர்  அசோகன் தலைமையிலான தனிப்படை போலீஸார் சென்னையில் தனியார் விடுதி  ஒன்றில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி ஹரிஹரசுதன்( 21),  பாடி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முரளி கிருஷ்ணன் ( 21),  பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்த வேலு மகன் ஜெகதீஸ்வரன் ( 20),  லாசர் மகன் தைரியநாதன் (21),விஜயங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை  கைதுசெய்தனர். 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 பெரிய பட்டாக்கத்தி, ஒரு அரிவாள் மற்றும் தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றச் சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் வெகுவாக பாராட்டினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in