`சட்டப்பேரவையில் சொல்ல ஒரு ஆள்கூட இல்லையே'- சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர் சங்கம் வேதனை

`சட்டப்பேரவையில் சொல்ல ஒரு ஆள்கூட இல்லையே'- சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர் சங்கம் வேதனை

சேது சமுத்திரத்  திட்டத்தால் ராமர் பாலம் பாதிக்கப்படக்கூடாது என சொல்வதற்கு ஆள் இருக்கும் தமிழ்நாடு  சட்டப்பேரவையில், அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள்  என்று சொல்ல ஒரு ஆள் கூட இல்லையே என்று தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னத்தம்பி வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  'மீனவர்களுக்கு எதிராகவும், கடல் வளத்தை அழிக்கும் வகையிலும் கடலில் காற்றாலை, கடலில் கனிம சுரங்கம், கடற்கரை கனிம சுரங்கம், கடலில் பேனா சிலை போன்ற பல்வேறு திட்டங்களை கடந்த ஓராண்டாக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு  தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 

தற்போது சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மீண்டும் தொடங்க  சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. சேது சமுத்திரத் திட்டம் நடைமுறையில் பொருளாதார லாபமில்லாத திட்டம், ஈடு செய்ய முடியாத சுற்றுச்சுழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் திட்டம் என்று நிபுணர் குழுவால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட திட்டம். 

மத்திய, மாநில அரசுகள் எடுத்த தவறான  கொள்கை முடிவால் கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. அதன் விளைவாக தமிழக மீனவர்கள் தமது பாரம்பரிய மீன்பிடி கடலில் மீன்பிடிக்க முடியாமல் போனது. இது ஒரு தீர்க்க முடியாத பிரச்சினையாக ஏற்பட்டுவிட்டது. இதனால் மீனவர்களுக்கு இன்றுவரை  ஈடு செய்ய முடியாத பல இழப்புகளை சந்தித்து வருகின்றனர்.

வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க சென்ற 500-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான  மீனவர்களின் படகுகள், வலைகள் உள்ளிட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் பொருளாதாரம் இலங்கை கடற்படையால் அழிக்கப்பட்டுள்ளது.  இதனால்  தமிழ்நாட்டு மீனவர்கள் தினம் தினம் பிரச்சினைகளை சந்தித்து  வாழ்ந்து வருகிறார்கள்.  எனவே கச்சத்தீவு பிரச்சினை நிவர்த்தி செய்ய முடியாத பிரச்சினையாக இன்று வரை  தொடர்கிறது. 

இந்திய -இலங்கை கடற்பகுதியில் 12 நாட்டிக்கல் பாரம்பரிய மீன்பிடி கடல் பகுதி மட்டுமே நமக்கு சொந்தமாக இருக்கிறது. இந்த குறுகிய கடல் பரப்பில்தான் பல லட்சம் மீனவர்கள் கடலை வாழ்வாதாரமாக கொண்டு இந்த கடலில் மீன் பிடித்து வாழ்கிறார்கள். இந்த சூழலில் இந்த குறுகிய கடல் பரப்பில் கப்பல் வழித்தடம் அமைப்பது மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்துவிடும். 

கப்பல்கள் மீன்பிடி படகுகள் மீது மோதுவதும், உயிரிழப்பு ஏற்படுவதும், மீன்பிடி வலைகள் கிழிக்கப்படுவதும் அன்றாட பிரச்சினையாக உருவாகும். அரசின் தவறான கொள்கை முடிவால் கச்சத்தீவு பிரச்சினை உருவானதுபோல், சேது கால்வாய் திட்டத்தின் மூலம் மீண்டும் ஒரு தீர்க்கமுடியாத  நீண்ட கால பிரச்சினை  ஏற்படுத்த வேண்டாம் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்  பவளப்பாறைகள், அரிய வகை கடல் உயிரினங்கள் உள்ளிட்ட அரிய கடல் வளங்களை அழித்து இயற்கைக்கு மீட்க முடியாத பேரழிவை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை செயல்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு நல்லதல்ல.  கடலில் இதுபோன்ற நாசகார திட்டங்களை செயல்படுத்துவது மனித குலத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும். குறிப்பாக தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.   

சேது சமுத்திரத் திட்டம் பொருளாதார ரீதியாக  அரசுக்கு சில ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கொடுக்கும் என கூறப்படுகிறது. ஆனால் மீனவ சமுதாயம் ஒரு வருடத்திற்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணியை இந்திய நாட்டிற்கு ஈட்டி கொடுக்கிறது. அதே சமயம் 5 லட்சம் கோடி ரூபாய் உள்நாட்டு செலாவணியும், 20% சதவீதம் வேலைவாய்ப்புகளையும் நாட்டிற்கு கொடுக்கிறது. இதில் 25% சதவீதம் தமிழ்நாட்டு மீனவர்கள் உழைப்பால் மத்திய மாநில அரசுகளுக்கு கிடைக்கிறது.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் அந்நிய  மற்றும் உள்நாட்டு செலாவணியும், 20% வேலை வாய்ப்புகளையும் தமிழ்நாட்டு மீனவர்கள் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டு மீனவர்களால் அரசுக்கு கிடைக்கும் வருமானத்தை விட சேது சமுத்திரத் திட்டத்தால் அரசுக்கு கிடைக்கும் வருமானம் மிக மிக குறைவு என்பதை அரசு பரிசீலனை செய்யவேண்டும். 

சேது கால்வாய் திட்டத்தை இந்த இடத்தில் செயல்படுத்துவதன் மூலம் மீனவர்களால் இந்தியாவிற்கு கிடைக்கும் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சிதைக்கப்படும். குறிப்பாக மீனவர்களால் உருவாக்கப்படும் தமிழகத்தின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும். 1072 கிமீ கடற்கரை உள்ளதால்தான் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் தன்னிறைவுடன் உள்ளது என்பதை அரசு எண்ணிப் பார்க்க வேண்டும். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சேது கால்வாய் திட்டத்தை  எதிர்த்து மீனவர்கள் சார்பில் கருத்து சொல்ல சட்டப்பேரவையில் முறையான பிரதிநிதித்துவம் இல்லை. சேது கால்வாய் திட்டத்தால் ராமர் பாலம் பாதிக்கப்படக்கூடாது  என சொல்வதற்கு ஆள் இருக்கும் சட்டப்பேரவையில் மீனவர்கள் பாதிக்காப்படுவார்கள் என்று சொல்ல ஒரு ஆள் கூட இல்லை என்பது வேதனையான விசயம்.

தமிழ்நாட்டில் 10% சதவீதம் வாக்கு வங்கி உள்ள மீனவ பழங்குடி மக்களுக்கு  சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் அரசியல் கட்சிகள் முறையான அரசியல் பிரதிநிதித்துவம் கொடுக்காததால்  மீனவர்களின் வாழ்வாதார மற்றும் வாழ்வுரிமை பிரச்சினைகளை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் எழுப்ப வாய்ப்பு இல்லாமல் போகிறது. இது சமூக நீதிக்கு எதிரானது. 

சேது சமுத்திரத் திட்டம் குறித்து மீனவர்களிடம் கருத்து கேட்பு நடத்த வேண்டும். மேலும் தமிழ்நாட்டு மீனவர்களின் நலனையும், கடல்வளத்தையும் கருத்தில் கொண்டு, 2013 மத்திய அரசின் நிபுணர் குழுவால் புவியியல் ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரதியாகவும் தோல்வியடைந்த திட்டம் என நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட சேது கால்வாய் திட்டத்தை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in