தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள் - மயிலாடுதுறை ஆட்சியரிடம் மன்றாடிய மீனவர்கள்

மயிலாடுதுறை ஆட்சியரிடம் மனு அளிக்கும் மீனவர்கள்
மயிலாடுதுறை ஆட்சியரிடம் மனு அளிக்கும் மீனவர்கள்

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டை மடி வலை  மற்றும் அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்வதை நிரந்தரமாக தடைசெய்ய வேண்டும் என 19 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் மயிலாடுதுறை  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 

தமிழ்நாடு அரசு கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி வலை,  இரட்டைமடி வலை,  அதிவேக குதிரை திறன் கொண்ட எந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகு பயன்படுத்தி மீன் பிடித்தல் உள்ளிட்ட. 21 கட்டுப்பாடுகளைக் கொண்ட மீன்பிடி ஒழுங்குமுறை தடைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. ஆனால் மீனவர்கள் சிலர் இந்த வலைகளை பயன்படுத்தி தொடர்ந்து மீன் பிடித்து வருகின்றனர்.

மேலும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில்,   வாரத்தில் இரண்டு நாட்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தி 12 நாட்டிக்கல் மைலுக்கு  அப்பால் மீன் பிடிக்கலாம் என்று, உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது.  இத்தீர்ப்பை அடுத்து மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் தலைமை கிராமமான தரங்கம்பாடியில்  சுருக்குமடி வலையை முற்றிலும் தடைசெய்ய கோருவது தொடர்பாக 11 மாவட்ட மீனவ பஞ்சாயத்து பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை பொதுக்கூட்டம்  கடந்த மாதம் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடிவலை, இரட்டைமடிவலை, அதிவேக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ள விசைப்படகு ஆகிய மூன்றையும் நிரந்தரமாக தடை செய்ய வேண்டும், 

சுருக்குமடி வலையை தொழிலுக்கு அனுமதிக்கும் சூழ்நிலை வருமானால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும், சுருக்குமடி வலையை தொழிலுக்கு அனுமதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் 11 மாவட்ட மீனவ கிராமங்களும் தொழில் மறியல் செய்வது என்று ஏகமனதாக 3 தீர்மானங்கள் நிறைவேற்றிருந்தனர். 

இந்த சூழலில்  சில தினங்களுக்கு முன்  தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த 19 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மற்றும் பழையாறு துறைமுகத்திலிருந்து தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டை மடி வலை மற்றும் அதிவேக  என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பதை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும் இது தொடர்பாக  அனைத்து மீனவக் கிராம பிரதிநிதிகள் ஒன்றிணைந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளிப்பது என்று தீர்மானித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் 19 மீனவ கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை சந்தித்து மனு அளித்தனர். 

அதில்  தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டைமடி வலை மற்றும் அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள விசைப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருவதால் சிறுதொழில் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், மேற்கண்ட மீன்பிடி தொழிலை நிரந்தரமாக தடைசெய்ய வேண்டும், 

இரட்டைமடி வலை மற்றும் அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை பயன்படுத்தி தொழில் செய்யும் பூம்புகார் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அவர்கள் மனு அளித்தனர். 

 மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in