வரைபடத்தில் மீனவ கிராமங்களைக் காணவில்லை: போராடத் தயாராகும் மீனவர்கள்

வரைபடத்தில் மீனவ கிராமங்களைக் காணவில்லை:  போராடத் தயாராகும் மீனவர்கள்

கடற்கரை மேலாண்மை திட்டம் 2019-ன் கீழ் வெளியிடப்பட்டுள்ள வரைபடத்தில் சுமார் 400 மீனவ கிராமங்களைக் காணவில்லை என புகார் தெரிவித்துள்ள மீனவர்கள் இதனை எதிர்த்து போராட தயாராகி வருகின்றனர்.

கடற்கரை மேலாண்மை திட்டம் 2019 வரைபடத்தை மாநில சுற்றுச்சூழல் துறை தனது இணையதளத்தில் அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள 608 மீனவ கிராமங்களில் சுமார்  400 மீனவ கிராமங்கள் இடம் பெறவில்லை என்கிறார்கள் மீனவர்கள்.  இந்த வரைபடத்தில் உள்ள  மேலும் பல குறைகளையும் மீனவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.     

கடந்த காலங்களில் வரைபடம் தமிழில் இருந்தது. அதனால் மீனவர்கள் புரிந்துகொள்ள முடிந்தது.  ஆனால் தற்போது வெளியிட்டுள்ள  வரைபடம் ஆங்கிலத்தில் உள்ளது. எனவே அதில் உள்ளவற்றை  புரிந்துகொள்ள முடியவில்லை என  மீனவர்கள் தங்களது அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். வரைபடத்தை திரும்ப பெற்று தமிழில்  தயாரித்து தரவேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள்.   

கடற்கரை மேலாண்மை வரைவு திட்டம் பிரிவு 6(3) விதிப்படி மாவட்ட கடற்கரை மண்டல மேலாண்மை குழுவில் மூன்று மீனவர்கள் இருக்கவேண்டும். அந்த  மீனவர் பிரதிநிதிகள் உதவியுடன் தான்  வரைபடம் தயாரிக்கப்பட வேண்டும். ஆனால் தமிழக கடலோர  மாவட்டங்களில் உள்ள குழுவில் மீனவர்கள் நியமிக்கப்படாமல்  வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே இது  விதி 6(3) க்கு முரணானது. எனவே, அந்த வரைபடத்தை திரும்ப பெறவேண்டும்.   

தமிழகத்தில் 608 மீனவ கிராமங்கள் இருப்பதாக மீன்வளத்துறை குறிப்பிட்டுள்ளது. ஆனால், வரைபடத்தில் மிகவும் குறைந்த மீனவ கிராமங்களே குறிப்பிடப்பட்டுள்ளன. சுமார் 400 மீனவ கிராமங்களைக் காணவில்லை.  வரைபடத்தில் மீனவர் குடியிருப்புகள், பயன்பாட்டு பகுதிகள், மீன் உலர்த்தும் தளம், மீனவர் பயன்பாட்டு இடங்கள், மீன்பிடி பகுதிகள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டு இருக்கவேண்டும். ஆனால், பெரும்பாலான இடங்கள் குறிப்பிடப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசு ஆளுமைக்குட்பட்ட பகுதிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாம்பன் அதை சுற்றியுள்ள மீனவ கிராமங்கள் முழுவதும் கப்பல் போக்குவரத்து துறை எல்லைக்குள் இருப்பது போன்று வரைபடம் வரையப்பட்டுள்ளது. அதேபோல் கடலில் உள்ள மீன்பிடி பகுதிகள் மறைக்கப்பட்டு கப்பல்துறை கட்டுப்பாட்டு பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.       

கடற்கரையில் இருந்து 500 மீட்டர் கடற்கரை மேலாண்மை சட்ட  விதியில் கீழ் வருகிறது. ஆனால்,  தனுஷ்கோடி முதல் கோடியக்கரை வரையிலான பாக் ஜலசந்தி கடற்கரை ஒட்டிய பகுதிகளில் வெறும் 50 மீ மட்டுமே  வரையரை பகுதியாக  காட்டப்பட்டுள்ளது. மீனவ மக்கள் அதிகமாக வாழும் கடற்கரை பகுதிகளை மறைத்து கடற்கரையில் நாசகார திட்டங்களை கொண்டு வர திட்டமிடுவதாக மீனவர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட  மாவட்டங்களில்   மாவட்ட ஆட்சியரிடம் மீனவர் அமைப்புக்கள் சார்பில்  புகார் கொடுத்துள்ளனர். மேலும் மாநில மீன்வளத்துறை ஆணையர் மற்றும் மாநில சுற்றுச்சூழல் துறை ஆணையர் ஆகியோரிடம் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு மற்றும் கடல்சார் மக்கள் நல சங்கம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமின்றி  அனைத்துக்கட்சி தலைவர்களை சந்தித்து கடற்கரை மேலாண்மை திட்டம்-2019 வரைபடத்தில் உள்ள குளறுபடிகள் குறித்து  எடுத்துக்கூறி இதுகுறித்த தங்களது நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in