`சுருக்குமடி வலையால் மீன்வளம் ஒட்டுமொத்தமாக அழிந்து விடும்'- கடற்கரையில் ஒன்று திரண்ட 3 ஆயிரம் மீனவர்கள்

சாமியார் பேட்டையில் கூடிய மீனவர்கள்
சாமியார் பேட்டையில் கூடிய மீனவர்கள்

சுருக்குமடி வலையை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியறுத்தி இன்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டை கடற்கரையில் திரண்டு போராட்டம் நடத்தினர்.

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் மீண்டும் கடலுக்குத் திரும்பியுள்ள நிலையில் சுருக்குமடிவலை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சுருக்குமடி வலையை பயன்படுத்தினால் கடலில் உள்ள மீன்வளம் ஒட்டுமொத்தமாக அழிந்து விடும் என்பதால் பெரும்பாலான மீனவர்கள் சுருக்கு முடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதிக இழுவைத் திறன் கொண்ட விசைப்படகுகள் வைத்துள்ள பெரிய மீனவர்கள் சிலர் சுருக்கு மடி வலையை பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் அதிக அளவு மீன்கள் கிடைப்பதுடன் அதிக லாபமும் அவர்களுக்கு கிடைப்பதால் அவர்கள் தொடர்ந்து சுருக்குமடி வலைகளை பயன்படுத்துகின்றனர்.

இதனால் சாதாரண விசைப்படகுகளில் சென்று மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு அதிக மீன்கள் கிடைப்பதில்லை. அவர்கள் தினந்தோறும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். அதனால் சுருக்கு மடி வலைகளை தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் பல மீனவ கிராமங்களில் இரு தரப்பினருக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவது உண்டு.

கடந்த வாரத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இது குறித்து இரு மீனவ கிராமங்களுக்கு இடையே பெரிய அளவில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் சுருக்கு மடிவலைகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும், அதிகத் திறன் கொண்ட விசைப்படகுகளையும் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் சாமியார் பேட்டையில் இன்று மீனவர்கள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாமியார் பேட்டை மீனவர்கள் ஏற்கெனவே 33 கிராமங்கள் சேர்ந்த மீனவர்களை ஒன்றிணைத்து இதே போன்ற போராட்டத்தை நடத்தினர். தற்போது அடுத்த கட்டமாக அருகில் உள்ள மயிலாடுதுறை, புதுச்சேரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களையும் ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் என மொத்தம் 60 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சாமியார் பேட்டை கடற்கரையில் திரண்டு கையில் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in