பைபர் படகில் மோதிய விசைப்படகு: கடலில் மூழ்கிய மீனவர் உயிரிழந்த பரிதாபம்

ராஜேந்திரன்
ராஜேந்திரன்

கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பைபர் படகின் மீது விசைப்படகு மோதியதில்,மீனவர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் செருதூரை சேர்ந்த ராஜேந்திரன்( 58),  எல்லப்பன் (46), முருகவேல் (40) ஆகிய 3 மீனவர்களும் இன்று கோடியக்கரைக்கு தென்கிழக்கே 12 கடல்மைல் தொலைவில் பைபர் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். 

அப்பொழுது அவ்வழியாக வந்த நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த அனிதா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு எதிர்பாராத விதமாக பைபர் படகு மீது மோதியது. இதனால் நிலைகுலைந்த பைபர் படகு கடலில் முழ்கியது. 

படகு கடலில் மூழ்கத்தொடங்கியதும் அதிலிருந்த மூன்று மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். தங்களை காப்பாற்றுமாறு கூக்குரல் எழுப்பினர். அந்த சத்தம் கேட்டு அவர்களின் படகில்  மோதிய விசைப்படகு  மீண்டும் திரும்பி வந்து மீனவர்களை காப்பாற்ற முனைந்தது.  அவர்களில் ராஜேந்திரன் என்ற மீனவர் உயிரிழந்துள்ளது  தெரிய வந்தது.

அதையடுத்து  ராஜேந்திரன் உடலையும், மீட்கப்பட்ட  எல்லையப்பன், முருகவேல் ஆகியோரையும் கோடியக்கரை கடற்கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். கடலில் முழ்கிய படகை மீட்க முடியவில்லை. வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தில் படகு உரிமையாளர் எல்லப்பன் கொடுத்த புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரன் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  மீனவர் உயிரிழந்துள்ள சம்பவம்  அப்பகுதி மீனவ கிராமங்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in