
கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அந்தந்த மாவட்டங்களின் மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான தாழ்வுப் பகுதி மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நீடிக்கிறது. இதன் விளைவாக தமிழக வங்கக் கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலுக்குள் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது.
எனவே, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் 20.12.2022 முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக் கூடாதென அறிவுறுத்தப்படுகிறது. மேலும் ஏற்கெனவே கடலில் உள்ள தங்கு கடல் படகுகள் அருகாமையில் உள்ள துறைமுகங்களுக்கு பாதுகாப்பாக கரை திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மாவட்ட மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆழ் கடலில் தங்கி மீன் பிடிக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி, பாதுகாப்புடன் உன்னை எச்சரிக்கையுடனும் இருந்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மீன்வளத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.