முதலாம் ஆண்டு மாணவர்கள் கன்னத்தில் அறைந்து ராகிங்: தெலங்கானா ஐஐஐடியில் போலீஸ் தீவிர விசாரணை

முதலாம் ஆண்டு மாணவர்கள் கன்னத்தில் அறைந்து ராகிங்: தெலங்கானா ஐஐஐடியில்  போலீஸ் தீவிர விசாரணை

தெலுங்கானாவின் ஐஐஐடியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்து கன்னத்தில் அறைந்து கொடுமைப்படுத்திய 3 சிறுவர்கள் உள்பட 5 மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் பாசரா நகரில் ஐஐஐடி நிறுவனம் (ராஜீவ் காந்தி யுனிவர்சிட்டி ஆஃப் நாலெட்ஜ் டெக்னாலஜிஸ்) உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கான விடுதியில் முதலாம் ஆண்டு மாணவர்களை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். ஜூனியர் மாணவர்கள் மூன்று பேரை கன்னத்திலேயே அவர்கள் அறைந்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், விடுதி காப்பாளரிடம் தங்களுக்கு நடந்த ராகிங் கொடுமை குறித்து புகார் செய்தனர். இதுகுறித்து விடுதி நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்து தாக்கியதாக ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பைன்சா கூறுகையில், “இந்த சம்பவம் நேற்று மாலை ஐஐஐடி பாசராவில் உள்ள விடுதியில் நடந்துள்ளது. இடைநிலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை ராகிங் செய்து கன்னத்திலேயே அறைந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக மூன்று சிறுவர்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்றார். இந்த சம்பவம் ஐஐஐடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in