தங்கள் பகுதியின் முதல் பெண் வழக்கறிஞர்: குதிரையில் ஏற்றி வரவேற்ற மக்கள்!

பெண் வழக்கஞருக்கு வரவேற்பு
பெண் வழக்கஞருக்கு வரவேற்பு

சட்டம் பயின்று வழக்கறிஞராக ஊர் திரும்பிய பெண்ணை குதிரை மீது ஏற்றி உற்சாக வரவேற்பளித்தனர்.

எதிலும் முதலிடம் என்பது வரலாற்று பதிவாகும். நம்பர் ஓன் இடத்தை பிடிப்பது அல்லது தக்க வைப்பது என்பது அவ்வளவு எளிதாக அமைந்து விடாது. பல்வேறு முட்டுக்கட்டைகள் , இடையூறுகளை தாண்டிதான் வெல்ல முடிகிறது. விஞ்ஞானம், தகவல்தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இன்றைய கால கட்டத்தில் முதலிட சாதனை முற்றுப்புள்ளி வைக்க முடியாத ஒன்றாக தொடர்கிறது. அப்படியொரு சூழலில்தான் மதுரையை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை ஒரு பெண் பெற்றுள்ளார்.

மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே மேலவாசல் குடியிருப்பு உள்ளது. இங்கு 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் வசிப்போர் மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் துாய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்தவர் துர்கா. சிறுவயதிலேயே துணிச்சலான இவர், வக்கீல் ஆக வேண்டும் என சபதம் எடுத்தார். இதற்கு அவரது பெற்றோரும் துணை நின்றனர். இதன்படி சட்டம் பயின்று வழக்கறிஞரான துர்கா, சென்னை பார் கவுன்சிலில் தனது பெயரை பதிவு செய்தார். மேலவாசல் பகுதியில் வழக்கறிஞரான முதல் பெண் துர்கா ஆவார்.

இதன்பின் இவர் சென்னையில் இருந்து ரயில் மூலம் இன்று காலை மதுரை வந்தார். அங்கு அவரை காண சென்ற அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், துர்காவை வழக்கறிஞர் உடையில் பார்த்து ஆனந்தமடைந்தனர். உற்சாக மிகுதியில் இருந்த அவர்கள் குதிரையை வரவழைத்து துர்காவை அதில் ஏற்றி ஊர்வலமாக மேலவாசல் அழைத்து வந்து உற்சாக வரவேற்பளித்தனர். இதனால் மேலவாசல் பகுதி இன்று விழா கோலமாக காட்சியளித்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in