முகேஷ் அம்பானி கூட இன்னும் வாங்கவில்லை... 10.5 கோடி ரூபாய் காரை முதலில் வாங்கிய தமிழர்!
இந்தியாவில் எந்த கோடீஸ்வரரும் இதுவரை வாங்காத புது வரவான ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரை முதன் முதலாக தமிழர் ஒருவர் வாங்கியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பே ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் கார் இந்தியாவில் சிலருக்கு மட்டுமே டெலிவரி செய்யப்படும் என்ற செய்தி வெளியானது. ஆடம்பர உலகின் உச்சமாகப் பார்க்கப்படும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு தான் இந்த ஸ்பெக்டர்.
பல மாற்றங்களையும், புதிய புரட்சியின் அடையாளமாக விளங்கும் ஸ்பெக்டர் காரை சென்னையைச் சேர்ந்த உள்கட்டமைப்பு கட்டுமான நிறுவனமான பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் பாஷ்யம் யுவராஜ் வாங்கிய முதல் தமிழன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் என்பது பிரிட்டிஷ் சொகுசு பிராண்டின் முதல் எலக்ட்ரிக் வாகனமாகும், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.9 கோடி ரூபாய், ஆன் ரோடு விலை சுமார் 10.5 கோடி ரூபாயாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் கார் இந்நிறுவனத்தின் முந்தைய வெளியீடான பாண்டம் காரின் அப்கிரேடெட் வெர்ஷனாகப் பார்க்கப்பட்டாலும், பல புதுமைகள் இதில் உள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் முதல் முறையாக எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்திருந்தாலும், அதன் பாரம்பரியமான வடிவமைப்பு, ஆடம்பரம் ஆகியவற்றைச் சற்றும் குறையாமல் பார்த்துக் கொண்டது. சுமார் 3 டன் எடை கொண்ட இந்தக் கார் ஓட்டும்போது பூப்போல் திருப்பும் அளவில் ஸ்டியரிங் வீல் இருக்கும். ஒரு விரலில் ஸ்டியரிங் வீல் திரும்பக் கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரின் எடை அதிகமாக இருந்தாலும் 593PS மற்றும் 900NM திறன் வெளிப்படுத்தக் கூடியது. ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் என்பதால் ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 520 கிலோமீட்டர் வரையில் பயணிக்க முடியும். மேலும் 0-100 கிமீ வேகத்தை வெறும் 4.5 நொடியில் தொடக்கூடிய திறன் கொண்டது.
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி எந்தக் காஸ்ட்லியான கார் அறிமுகமானாலும், உடனே வாங்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரே இன்னும் இந்தக் காரை வாங்காத நிலையில் அவருக்குப் போட்டியாக ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரை பாஷ்யம் யுவராஜ் அவருக்கு முன்னதாக வாங்கி அசத்தியுள்ளார்.