தற்கொலையைத் தடுக்க ஒரு திட்டம்: இந்தியாவில் இதுவே முதல் முறை!

தற்கொலையைத் தடுக்க ஒரு திட்டம்: இந்தியாவில் இதுவே முதல் முறை!

அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுக்க ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு. 2030-ம் ஆண்டுக்குள் 10 சதவீதம் தற்கொலைகளைத் தடுக்கும் இலக்குடன் இந்தத் திட்டம் கொண்டுவரப்படுகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். குறிப்பாக, 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகம். 34 சதவீதம் பேர் குடும்பப் பிரச்சினைகள் காரணமாகவும், 18 சதவீதம் பேர் உடல்நலக் குறைவு காரணமாகவும் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில், ஒரு லட்சம் பேரில் தற்கொலைகளின் விகிதம் 10.2 சதவீதத்திலிருந்து 11.3 சதவீதமாக அதிகரித்திருப்பது அரசுக்குக் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை நேற்று ‘தேசிய தற்கொலைத் தடுப்பு உத்தி’ எனும் பெயரில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது.

வெவ்வேறு துறைகள் இணைந்து செயல்படுத்தப்போகும் இந்தத் திட்டத்தின் மூலம், 2030-ம் ஆண்டுக்குள் தற்கொலை மரணங்களில் 10 சதவீதத்தைக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் தற்கொலை தடுப்புக்காகப் பிரத்யேகக் கண்காணிப்பு அமைப்புகளை நிறுவுவது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாவட்ட மனநல சுகாதாரத் திட்டத்தின் கீழ் வெளிநோயாளிகள் பிரிவு அமைப்பது, அடுத்த எட்டு ஆண்டுகளில் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மனநலம் தொடர்பான பாடத்திட்டத்தைச் சேர்ப்பது ஆகிய வியூகங்கள் இந்தத் திட்டத்தில் உள்ளன.

இந்தத் திட்டத்துக்கான வரைவை உருவாக்கியவர், மனநல மருத்துவரும் ஸ்நேகா ஃபவுண்டேஷன் நிறுவனருமான லக்‌ஷ்மி விஜயகுமார். இதுதொடர்பாக, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழிடம் பேசிய அவர், “தற்கொலை ஒரு பிரச்சினை என்பதை அரசு ஒப்புக்கொண்டிருப்பது முக்கியமான விஷயம். வெவ்வேறு துறையினரின் பங்கெடுப்பில்தான் இதைத் தடுப்பதற்கான உத்தியை உருவாக்க முடியும் எனும் நிலையில், பல்வேறு துறையினரின் பங்களிப்பில் நன்கு திட்டமிடப்பட்ட ஒன்றாக இது கொண்டுவரப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தற்கொலை தடுப்பு உதவி மைய எண்கள்:

சினேகா ஃபவுண்டேஷன் - 044- 24640050

தமிழக அரசு உதவி மைய எண் - 104

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in