பொறுப்பேற்றதும் போட்ட முதல் கையெழுத்து: வைரலாகும் கேரள கலெக்டரின் கடிதம்!

பொறுப்பேற்றதும் போட்ட முதல் கையெழுத்து: வைரலாகும் கேரள கலெக்டரின் கடிதம்!

கேரள மாநிலம் ஆலப்புழா ஆட்சியராக கிருஷ்ண தேஜா நேற்று பொறுப்பேற்றார். இதற்கு முன்பு இங்கு ஆட்சியராக இருந்த ஸ்ரீராம் வெங்கிடராமன் சர்ச்சையில் சிக்கியிருந்ததால் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வந்தது. இதனால் அவரை ஆட்சியர் பொறுப்பில் இருந்து பதவியேற்ற ஒருவாரத்திற்குள்ளாகவே விடுவித்தது கேரள அரசு. புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற கிருஷ்ண தேஜா தன் முதல் கையெழுத்துப்பற்றி எழுதிய கடிதம் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

கேரளத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கனமழையின் காரணமாக இதுவரை பத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் ஆலப்புழா மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்ப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பில் தன் முதல் கையெழுத்தைப் போட்டார் ஆலப்புழா ஆட்சியர் கிருஷ்ண தேஜா.

இதுதொடர்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு கடிதம் எழுதி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஆட்சியர். அந்தக் கடிதத்தில், “நான் உங்கள் மாவட்ட ஆட்சியராக இன்று பொறுப்பேற்றுள்ளேன். கலெக்டர் இருக்கையில் அமர்ந்து போடும் முதல் கையெழுத்து எனது மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூட மாணவர்களான உங்களுக்காக. நமது மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் உங்கள் பாதுகாப்பு கருதி நாளைய தினம்(இன்று) அனைத்து கல்வி நிறுவனங்களும் விடுமுறை அறிவித்துள்ளேன்.

பள்ளிக்கூடத்துக்கு லீவ் என்பதால் நீர் நிலைகளை நாடுவதோ, மீன் பிடிக்கச் செல்வதற்காகவோ எவரும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. அப்பா, அம்மா வேலைக்குச் சென்றிருந்தால் வீட்டில் யாரும் இல்லையே என்று வெளியே செல்லவும் முயற்சிக்க வேண்டாம். தொற்றுநோய்கள் பரவும் காலமாகவும் இருப்பதால் நமது பாதுகாப்பையும் நாமே உறுதி செய்ய வேண்டும். சரியான நேரத்தில் உணவுண்டு, ஹோம் ஒர்க் பாடங்களை நன்றாக படித்து ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும் ”என வழிகாட்டியுள்ளார் ஆட்சியர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in