முதல் ட்ரோன் பள்ளி: ம.பி முதல்வர் மகிழ்ச்சி!

முதல் ட்ரோன் பள்ளி: ம.பி முதல்வர் மகிழ்ச்சி!

இன்றைக்கு ட்ரோன்கள் பயன்பாடு பரவலாகிவிட்டது. திருவிழாக் காலங்களில் கண்காணிப்பு, திருமண நிகழ்வுகள், தேர்தல் காலப் பாதுகாப்பு எனப் பல்வேறு விஷயங்களில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை ட்ரோன் தொழில்நுட்ப வளர்ச்சியில் மத்திய பிரதேசம் முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குவாலியரில் ட்ரோன் கண்காட்சியை பிரம்மாண்டமாக நடத்திக்காட்டியது மத்திய பிரதேச அரசு.

அதில் ட்ரோன் உற்பத்தியாளர்கள், ட்ரோன்கள் மூலம் பல்வேறு துறைகளில் சேவை வழங்குபவர்கள், ஆர்வலர்கள், ட்ரோன் பயன்படுத்தும் சமூகக் குழுக்கள், மாணவர்கள், விவசாயிகள், சாமானியர்கள் எனப் பல தரப்பினர் பங்கேற்றனர். பல வித ட்ரோன்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த அந்தக் கண்காட்சியில், ட்ரோன் தயாரிப்பு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், பார்வையாளர்களுக்கு அவற்றின் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், அதன் அடுத்த கட்டமாக மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் முதன்முதலாக ‘ட்ரோன்’ பள்ளி நேற்று திறக்கப்பட்டிருக்கிறது. மத்திய பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுஹான், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் இந்தப் பள்ளியைத் திறந்துவைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஷிவ்ராஜ் சிங் சவுஹான், “பல்வேறு நோக்கங்களுக்காக ட்ரோன்களைப் பயன்படுத்த முடியும் என்பதால், ட்ரோன் தயாரிப்புத் துறையில் பெரும் வேலைவாய்ப்பு இருக்கிறது” என்று கூறினார். இளைஞர்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

'கூ' செயலியில் இதுகுறித்துப் பதிவிட்ட அவர், “மத்தியப் பிரதேசத்தில் ஐந்து ட்ரோன் பள்ளிகளைத் திறக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக குவாலியரின் புனித பூமியில் இன்று முதல் பள்ளியை மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கினார். இதன் மூலம் சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டு, வேலை வாய்ப்பு அதிகரிக்கும். முதல் பள்ளிக்கு மீண்டும் வாழ்த்துகள்” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in