பிபின் ராவத் நினைவு தினத்தில் ஐம்பொன் திருவுருவ சிலை: முப்படையினர் அஞ்சலி

பிபின் ராவத் நினைவு தினத்தில் ஐம்பொன் திருவுருவ சிலை: முப்படையினர் அஞ்சலி

இந்திய ராணுவத்தின் முன்னாள் முதன்மைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் முதலாம் ஆண்டு நினைவு புகழஞ்சலி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. ராணுவ வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முப்படை வீரர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மேஜர் ஜெனரல் பி.கே.ஷர்மா, ராணுவ முதன்மைத் தளபதி ஜெனரல் மனோஜ்பாண்டே, முப்படைத் தளபதி ஜெனரல் அனில் சௌகான், கடற்படை முதன்மைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமார், விமானப்படை முதன்மைத் தளபதி ஏர் மார்ஷெல் வி.ஆர்.சௌத்ரி உள்ளிட்ட முப்படை தளபதிகள் புகழஞ்சலி செலுத்தினார்கள். 

இந்த கூட்ட அரங்கில் கடலூர் ஷைன் இந்தியா சோல்ஜர்ஸ் சமூக நல அமைப்பு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நல சங்கம் சார்பில் வழங்கப்பட்ட பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலையை பாதுகாப்புத்துறை  இணை அமைச்சர் அஜய்பட்  திறந்து வைத்தார். இந்த சிலை கும்பகோணத்தில் தயார் செய்யப்பட்டதாகும்.

நிகழ்வில், இந்திய ராணுவத்தில் பிபின் ராவத் இணைந்தது முதல் அவர் ஆற்றிய பன்முகத்தன்மை கொண்ட பங்களிப்புகள் குறித்து ஆவணப்பட காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டது.

ஜெனரல் பிபின் ராவத்  ஐம்பொன் திருவுருவச் சிலையை சிறப்பாக வடிவமைத்து நினைவுப் பரிசாக வழங்கிய சிலை நிர்மாணக் குழுவினருக்கும், சிற்பி  கும்பகோணம் அ.இராம்குமார் ஸ்தபதிக்கும் விழா மேடையில்  பாராட்டு தெரிவிக்கப் பட்டது. மேலும் சிலை நிர்மாணக்குழு சார்பில் பிபின் ராவத் மகள் கிருத்திகாவிற்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

கூட்டத்தின் நிறைவாக அளிக்கப்பட்ட தேநீர் விருந்தில், சிலை நிர்மாணக்குழு தலைவர் கடலூர் பாபு குழுவினருடன் இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பிபின் ராவத் சிலை பரிசளிக்கப்பட்டிருப்பது, பகலிரவு பாராது தேசம் காக்கும் ராணுவ வீரர்களுக்கு உற்சாகம் அளிப்பது என கூட்டத்தில் பேசியவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in