புத்தாண்டு: முதல் மற்றும் கடைசியாக இங்கே பிறக்கிறது!

புத்தாண்டு சுவாரசியங்கள்
புத்தாண்டு: முதல் மற்றும் கடைசியாக இங்கே பிறக்கிறது!

2023 புத்தாண்டுக்கான கவுண்ட் டவுன் உலகமெங்கும் தொடங்கி உள்ளது. இவற்றின் மத்தியில் சில நாடுகள் முந்திக்கொண்டு புத்தாண்டினை கொண்டாடுவதும், உலகமே கொண்டாடி தீர்த்த பிறகு சில நாடுகள் சாவகாசமாக புத்தாண்டு கொண்டுவதுமாக நேர விநோதங்கள் அரங்கேறும்.

2 ஆண்டுகளாக கரோனா காரணமாக அலைக்கழிந்த உலகம், 2022-ல் பெருமூச்சு விட்டது. கரோனா கட்டுப்பாடுகள் விடைபெற்றதில் உலக நாடுகள் இயல்பு வாழ்க்கைக்கு பெருமகிழ்ச்சியுடன் திரும்பின. ஆனபோதும் சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் அதிகரிக்கும் பரவல், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், ஈரானில் தொடங்கி உலகம் முழுக்க பரவிய ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம், அதிகரித்த வேலைநீக்கம், விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார சுணக்கம் உள்ளிட்ட சங்கடங்களையும் 2022-ம் ஆண்டு தந்திருக்கிறது.

பிறக்கும் 2023-ம் ஆண்டும் கையில் பூங்கொத்துடன் முகக்கவசம் அணிந்தே வரவேற்கிறது. இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளிலும் அடுத்த கரோனா அலை குறித்தான அச்சங்கள் எழுந்துள்ளன. ஆனபோதும் தடுப்பூசி மற்றும் சமூக கட்டுப்பாடுகளின் உதவியாலும், முந்தைய அலைகள் தந்த அனுபவத்தாலும், கரோனா புதிய திரிபுகளை எதிர்கொள்ளும் நம்பிக்கையையும் 2022-ம் ஆண்டு தந்திருக்கிறது.

இந்த நம்பிக்கையில் 2033-ம் ஆண்டினை வரவேற்க தயாராகிறது உலகம். பெரும்பாலான நாடுகளில் பரவலாக கொண்டாடப்படும் விழா என்ற பெருமைக்கு உரியபோதும், உலகம் முழுக்க ஒரே நேரத்தில் புத்தாண்டு கொண்டாடப்படுவதில்லை. புத்தாண்டு பிறக்கும் உள்ளூர் நேரப்படியே அவை கொண்டாடப்படுவதால், நமக்கு முந்தியும் பிந்தியுமாக பல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமைந்திருக்கின்றன.

இந்த வகையில் இந்திய நேரப்படி டிச.31 மாலை 3.30 மணிக்கெல்லாம் டோங்கா, கிரிபட்டி, சமோவா போன்ற பசிபிக் குட்டித் தீவு தேசங்கள் பட்டாசு வெடித்து புத்தாண்டினை கொண்டாட தொடங்குகின்றன. தொடர்ந்து பல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்களும் அமைய, கடைசி கொண்டாட்டம் அமெரிக்க ஆளுகைக்கு உட்பட்ட பேக்கர் மற்றும் ஹவ்லாந்த் தீவுகளில் அரங்கேற வேண்டும். இந்திய நேரப்படி ஜனவரி 1, மாலை 5.30 மணிக்கு இங்கே புத்தாண்டு பிறக்கிறது. ஆனால் ஆளரவமற்ற இந்த தீவுகளில் புத்தாண்டினை வரவேற்க பவளப்பாறைகள் மட்டுமே உள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in