குமரி மீனவர்கள் மீது நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: சவுதியில் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

குமரி மீனவர்கள் மீது நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: சவுதியில் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

சவுதி அரேபியாவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(37). இவர் சின்னமுட்டம், பெருமணல் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களோடு சவுதி அரேபியாவில் ஆழ்கடலில் மீன்பிடித் தொழில் செய்துவருகிறார். சவுதி முதலாளிக்குச் சொந்தமான விசைப்படகில் இவர்கள் கடந்த 22-ம் தேதி, ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் விசைப்படகின் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். தொடர்ந்து மீனவர்கள் விசைப்படகில் வைத்திருந்த ஜிபிஎஸ், எக்கோ சவுண்டர், வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள், செல்போன் ஆகியவற்றையும் பறித்துச் சென்றுவிட்டனர்.

கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி படகில் நுழைந்ததில் ராஜேஷ்குமாரின் இடதுகண்ணில் குண்டடிபட்டது. அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இந்தநிலையில் சக மீனவர்கள் அவரை மீட்டு, சவுதி அரேபியாவில் கடற்படை உதவுயுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். சவுதி அரேபியாவில் மட்டும் தமிழகம், கேரளத்தைச் சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த அந்த மீனவர்கள், சவுதி அரசு மீன்பிடித் தொழிலாளியின் பாதுகாப்பை உறுதி செய்த பின்புதான் மீன்பிடித் தொழிலுக்கு செல்வோம் எனப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே பல்வேறு காலக்கட்டங்களில் குமரிமாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் சவுதியில் கடற்கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in