
சிவகாசியில் எலக்ட்ரிக்கல் பொருட்கள் கடையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3.50 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மணி நகரைச் சேர்ந்தவர் ரவி அருணாச்சலம். திருவில்லிபுத்தூர் சாலையில் இவரது மின்சாதனப் பொருட்கள் மொத்த விற்பனை கடை உள்ளது. நேற்று வியாபாரம் முடிந்து அனைவரும் வீட்டிற்குச் சென்று விட்டனர். இந்நிலையில் நள்ளிரவில் பூட்டிய ரவி அருணாசலம் கடையில் இருந்து மளமளவென புகை வெளியேறியது. கடையின் உள்ளே தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயின் வேகத்தை கட்டுப்படுத்த இயலாமல் போனதால் திருவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை, சாத்தூர் பகுதி தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் கடையின் 2 தளங்களில் இருப்பு வைத்திருந்த மின் மோட்டார், மின்விசிறி, மின் அடுப்பு, வயர்கள், பல்புகள், பிளாஸ்டிக் பைப்கள் மற்றும் மின்சாதனப் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு ரூ.3.50 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது. விபத்திற்கான காரணம் குறித்து சிவகாசி டவுன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.