அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவு அருகே பற்றி எரிந்த தீ: நள்ளிரவில் நடந்தது என்ன?

மருத்துவமனை அருகே எரியும் தீ.
மருத்துவமனை அருகே எரியும் தீ.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு அருகே நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் உயர்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருகின்றனர். இம்மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு அருகே அமைந்திருக்கும் சுரங்கப்பாதை பகுதியில் சாலையோர வியாபாரிகள் சிலர் தங்களது பொருட்களை அடுக்கி வைத்திருந்தனர், இதில் திடீரென, நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.

தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்
தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்

சற்று நேரத்தில் தீயானது மளமளவென பரவி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தில் பற்றி எரியத் தொடங்கியது. இதனால், அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவத்தின் போது யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றாலும் தீவிர சிகிச்சை பிரிவு அருகே திடீரென தீப்பற்றியதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in