19 மணி நேரமாக பற்றி எரியும் தீ; புகை மூட்டமாக காட்சியளிக்கும் பூக்கடை: போராடும் தீயணைப்பு வீரர்கள்

 பற்றி எரியும் தீ
பற்றி எரியும் தீ 19 மணி நேரமாக பற்றி எரியும் தீ; புகை மூட்டமாக காட்சியளிக்கும் பூக்கடை: போராடும் தீயணைப்பு வீரர்கள்

சென்னையில் பரிசு பொருட்கள் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தது. 19 மணி நேரத்திற்கும் மேலாக கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கீம் சிங். இவர் பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் சாமுண்டா கிப்ட் சென்டர் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். நான்கு மாடி கொண்ட கட்டிடத்தில் இரண்டு தளங்களில் பரிசு பொருட்கள் மொத்த வியாபாரம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதியும், மீதமுள்ள இரண்டு தளங்களில் குடோனையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் குடோனில் மின்கசிவு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டு, கரும்புகை கிளம்பியதால் அருகிலிருந்தோர் கொடுத்த தகவலின் பேரில் வண்ணாரப்பேட்டை, பூக்கடை, எஸ்பிளனேடு உள்ளிட்ட 11 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 50க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பொம்மைகள், கடிகாரம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் என அனைத்துமே எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் என்பதால் தீப்பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. குறுகியசாலை, இடுக்கலான கட்டிடப்பகுதி என்பதால் கட்டிடத்தின் சுவர்களை உடைத்து அது வழியாக இறங்கி தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தீ பக்கத்து சாலையில் உள்ள கட்டிடத்திற்கும் பரவியதால் உடனடியாக கட்டிடம் அருகே இருந்த குடியிருப்பு வாசிகள் அனைவரையும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். மேலும் புகை தொடர்ச்சியாக வெளியே வந்ததால் ஸ்கை லிப்ட் மிஷின், பிரத்யேக ஆடை அணிந்து தீயணைப்பு வீரர்கள் தீ மற்றும் புகையை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

புகையின் மையப் பகுதிக்கு செல்ல முடியாததால் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு சுமார் 19 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட ஒரு லட்சம் லிட்டருக்கு அதிகமான தண்ணீரை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் லோகநாதன் தகவல் தெரிவித்துள்ளார். இந்த தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த பல கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின.

19 மணி நேரத்தை கடந்தும் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதால், எப்போதுமே பரபரப்பாக இயங்கும் பூக்கடை பகுதி புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in