
வீட்டில் ஃபிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் இன்ஸ்பெக்டர் சபரிநாத்(41). இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்த சபரிநாத் தற்போது சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 3-ம் தேதி இன்ஸ்பெக்டர் சபரிநாதன் மருத்துவ விடுப்பில் சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் இன்று காலை அவரது பொள்ளாச்சி வீட்டில் திடீரென ஃபிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு இன்ஸ்பெக்டர் சபரிநாத் சம்பவயிடத்திலேயே பலியானார்.
மேலும் இன்ஸ்பெக்டர் வீட்டின் கீழ் தளத்தில் வாடகைக்கு குடியிருந்து வந்த சாந்தி(37) என்ற பெண்மணியும் தீ விபத்தில் சிக்கி பலியானார். தகவல் அறிந்து அங்கு வந்த பொள்ளாச்சி தாலுகா போலீஸார் இருவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் சிக்கி இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.