முறையற்ற ரயில் பயணம்: அபராதமாக ரூ.14.65 கோடி வசூல்

சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு
ரயில்
ரயில்

டிக்கெட் இல்லாத பயணம், ஒழுங்கற்ற பயணம், முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ் உள்ளிட்டவைக்காக, கடந்த ஓராண்டில் மட்டும் சேலம் ரயில்வே கோட்டம் அபராதமாக ரூ.14.65 கோடி வசூல் செய்துள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்தின் டிக்கெட் சரிபார்ப்புக் குழு உறுப்பினர்கள் பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிய, ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் வழக்கமான சோதனைகளை மேற்கொள்கின்றனர். இதுபோன்ற சோதனைகளின் போது, பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் நபர்கள், முறையற்ற பயணம், முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ் போன்றவற்றை கண்டறிந்து அதற்கேற்ப அபராதம் விதிக்கின்றனர்.

அதன் படி சேலம் கோட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அபராதமாக ரூ.14.65 கோடி வசூல் செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் ரூ.9.74 கோடி வசூல் செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய தொகையை விட ரூ.4.90 கோடி அதிகமாகும்.

இதுகுறித்து சேலம் கோட்ட மக்கள் தொடர்பு துறை அதிகாரி கூறுகையில், ‘‘ 2022-23 ஏப்ரல் - பிப்ரவரி மாதங்களில், சேலம் கோட்டத்தின் டிக்கெட் சோதனைக் குழுக்கள், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 1,90,202 வழக்குகளைக் கண்டறிந்து, குற்றவாளிகளிடமிருந்து அபராதமாக ரூ.13.36 கோடி வசூலித்தது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகையில் 40.60% அதிகமாகும்.

மேலும், 2022-23 ஏப்ரல் - பிப்ரவரி மாதங்களில் 25397 முறைகேடான பயணங்கள் கண்டறியப்பட்டு, பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.1,26,26,990 வசூலிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கண்டறியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையில் 530.82% மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகையில் 531.55% அதிகரித்துள்ளது.

இதேபோல், 2022-23 ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையில், 507 முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ்கள், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பொருட்களை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது. இந்த வழக்குகளுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட தொகை ரூ.3,24,758 ஆகும்.

53,598 சோதனைகளில் சேலம் கோட்டத்தின் டிக்கெட் சரிபார்ப்புக் குழு உறுப்பினர்கள் இந்த முறைகேடுகள் மற்றும் குற்றங்களைக் கண்டறிந்தனர். இதன் அடிப்படையில் அபராதமாக வசூலித்த மொத்தத் தொகை ரூ.14,65,10,717 ஆகும். இது 2021-22 ஏப்ரல் - பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 50.33% சதவீதம் அதிகமாகும்,’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in