
காஷ்மீரில் குல்காம், புல்வாமா, அனந்த்நாக் மற்றும் சோபியான் ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது.
காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளித்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனைகளை என்ஐஏ மேற்கொண்டுள்ளது. குல்காம், புல்வாமா, அனந்த்நாக் மற்றும் ஷோபியான் ஆகிய இடங்களில் உள்ள சந்தேக நபர்களின் வீடுகளில் என்ஐஏ சோதனை தற்போது நடந்து வருகிறது. என்ஐஏ குழுக்களுடன் போலீஸார் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
புல்வாமாவில் வசிக்கும் பத்திரிகையாளர் ஒருவர் என்ஐஏவால் கைது செய்யப்பட்டார். அவர் உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளித்தது தொடர்பாக ஹூரியத் தலைவர் காசி யாசிர் மற்றும் ஜம்மு காஷ்மீர் சால்வேஷன் இயக்கத்தின் தலைவர் ஜாஃபர் பட் ஆகியோரின் வீடுகளில் கடந்த வாரம் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.