நாகையில் நள்ளிரவில் பயங்கரம்: பைனான்சியரைக் கொன்று விட்டு பைக்கில் தப்பிய கும்பல்

மனோகர்
மனோகர்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் விடுதி உரிமையாளரும், பைனான்ஸ்சியருமான மனோகர் என்பவர் ஒரு கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர். இவர் அப்பகுதியில் பைனான்சியராகவும், வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி ஒன்றும் நடத்தி வருகிறார். இவருக்கும், சிலருக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மனோகர் வேளாங்கண்ணி முச்சந்தி அருகே உள்ள அவரது அலுவலகத்தில் நண்பர் மணிவேலுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிலர் மனோகரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மணிவேல் தடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவரையும் கையில் வெட்டிய அந்த கும்பல் அவரை அங்கிருந்து தள்ளி சென்றுவிடும்படி எச்சரித்துள்ளது.

கையில் காயம் அடைந்த நிலையில் மணிவேல் நகர்ந்துவிட மனோகரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் தலை முழுவதும் காயங்கள் அடைந்த மனோகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த படுகொலை சம்பவம் அறிந்து அங்கு வந்த நாகை எஸ்பி ஜவகர், நேரில் விசாரணை மேற்கொண்டார். மனோகரின் உடல் நாகை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயம் அடைந்த மணிவேல் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மனோகரை படுகொலை செய்து விட்டு மூன்று இருசக்கர வாகனங்கள் மூலம் தப்பிச்சென்ற குற்றவாளிகள் குறித்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளைக் கொண்டு தேடி வருகின்றனர்.

வேளாங்கண்ணியில் விடுதி உரிமையாளரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளதை அடுத்து அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in