நிதி நிறுவன மோசடி வழக்கு: பெண் உள்ளிட்ட இருவர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

நிதி நிறுவன மோசடி வழக்கு:  பெண் உள்ளிட்ட இருவர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்த பெண் உட்பட இருவரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது எழும்பூர் நீதிமன்றம்.

சென்னை வளசரவாக்கம் ஏ.ஜி.எஸ் காலனியைச் சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் பரமேஸ்வரி ஆகிய இருவர் கடந்த 2020-ம் ஆண்டு கே.கே நகரில் நிதி நிறுவனம் (RockTown Auto mobiles Gear purchase And Finance) ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தனர். குறிப்பாக தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 30 சதவீதம் வட்டியும், 6 சதவீத ஊக்கத் தொகையும் வழங்கப்படும் எனக்கூறி அவ்விருவரும் விளம்பரம் செய்ததால், அதனை நம்பி பலர் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

ஆனால், மோகன்ராஜ் மற்றும் பரமேஸ்வரி ஆகிய இருவரும் சொன்னபடி முதலீட்டாளர்களுக்கு வட்டியையும், ஊக்கத் தொகையையும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் அனைவரும் கே.கே நகரில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்திற்கு நேரில் சென்று பார்த்தனர். அப்போது நிதி நிறுவனம் பூட்டப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த முதலீட்டாளர்கள், நிதி நிறுவனம் நடத்தி வந்த மோகன்ராஜ் மற்றும் பரமேஸ்வரி ஆகிய இருவர் மீதும் சென்னை பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதை அறிந்த மோகன்ராஜ், பரமேஸ்வரி ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மோகன்ராஜ் மற்றும் பரமேஸ்வரி ஆகிய இருவரும் நிதி நிறுவனம் நடத்தி கோடிக் கணக்கில் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக மோகன்ராஜ் மற்றும் பரமேஸ்வரி ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்ற நிலையில், வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை தயார் செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்தனர்.

எழும்பூர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் மோகன்ராஜ், பரமேஸ்வரி ஆகிய இருவரும் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மோகன்ராஜ், பரமேஸ்வரி ஆகிய இருவரையும் குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் பிரிவு 82 (1)-ன் படி தேடப்படும் குற்றவாளிகளாக சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் அறிவித்தது. இவர்கள் இருவரையும் வரும் டிசம்பர் 14-ம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in