6-ம் வகுப்பு மாணவர்களுக்குள் மோதல்: டிஎஸ்பி விசாரணை

6-ம் வகுப்பு மாணவர்களுக்குள் மோதல்: டிஎஸ்பி விசாரணை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

தூத்துக்குடி அம்மன்கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த இரு மாணவர்கள், அதே பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் வழக்கமாக பள்ளிக்கூடம் முடிந்து, பள்ளி வேனில் வீட்டிற்கு வருவது வழக்கம். நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்து வேனில் ஏறியபோது, இடம்பிடிப்பது தொடர்பாக இரு மாணவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஒரு மாணவன், மற்றொரு மாணவனைத் தாக்கினார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவர் வீட்டிற்குச் சென்றதும் இதுகுறித்து தன் தந்தையிடம் சொன்னார். உடனே அவர் தன் மகனையும் அழைத்துக்கொண்டு, தாக்கிய 6-ம் வகுப்பு மாணவனின் வீட்டிற்கு அழைத்துச் சென்று நியாயம் கேட்டார். அப்போது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தன் மகனைத் தாக்கிய மாணவனை, தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் தந்தை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளான். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் டிஎஸ்பி சத்தியராஜ் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். 6-ம் வகுப்பு மாணவர்களுக்குள் நடந்த மோதல் டிஎஸ்பி விசாரணை வரை நீண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in