மயக்க மருந்து கொடுத்து பெண் நோயாளி கூட்டுப்பலாத்காரம்: அரசு டாக்டர், வார்டு பாய் கொடூர செயல்
உத்தரப்பிரதேசத்தில் சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த அரசு மருத்துவர் மற்றும் வார்டு பாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ பகுதியில் மகாநகர் பகுதியில் உள்ளது பிஆர்டி மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஒரு பெண் வந்துள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த அரசு மருத்துவர் அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். அவருக்கு உடந்தையாக வார்டு பாயும் இருந்தார். பெண் மயக்கம் அடைந்த பின்னர் மருத்துவமனை அறையிலேயே வைத்து இருவரும் சேர்ந்து அந்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்த பின் அங்கிருந்து தப்பிய அந்த பெண், காவல் நிலையத்தில் தனக்கு நடந்த கொடுமை குறித்து புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் அரசு மருத்துவர் மற்றும் வார்டு மீது வழக்குப்பதிவு செய்தனர். வார்டு பாயை நேற்று கைது செய்தனர். இதுகுறித்து காவல் துறை துணை ஆணையர்(வடக்கு) எஸ்.எம்.காசிம் அபிதி கூறுகையில்," ஏப்.30-ம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற போது மயக்க மருந்து கொடுத்து அரசு மருத்துவர், வார்டு பாய் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து மகாநகர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 376-டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு மருத்துவர் தற்போது அயோத்தி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மகாநகர் காவல்துறை சார்பில் குழு நியமிக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.