பெண்ணின் நிர்வாணத்தை ஆபாச கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது:ரெகனா வழக்கில் கேரளா நீதிமன்றம் அதிரடி

ரெகனா பாத்திமா
ரெகனா பாத்திமாபெண்ணின் நிர்வாணத்தை ஆபாச கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது:ரெகனா வழக்கில் கேரளா நீதிமன்றம் அதிரடி

கேரளத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது அந்த கோயிலுக்குச் செல்ல முயன்று பரபரப்பாக உச்சரிக்கப்பட்ட பெயர் ரெகனா பாத்திமா. மீண்டும் கேரளம் இப்போது அவர் பெயரை உச்சரிக்கிறது.

அண்மையில் ரெகனா பாத்திமா மேல் ஆடையின்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் அவரது உடலின் மேல் குழந்தைகள் ஓவியம் தீட்டுகின்றனர். இதையடுத்து கேரள மாநில பாஜக நிர்வாகி அருண்பிரகாஷ், ரெகனா மீது போக்சோ, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கோரி புகார் கொடுத்தார். இதையடுத்து கேரள மாநில குழந்தைகள் ஆணையமும் வழக்குப்பதிய உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து பத்தனம்திட்டா போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கவேண்டும் என கீழமை நீதிமன்றத்தில் ரெகனா பாத்திமா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்தில் ரெகனா மேல்முறையீடு வழக்குத் தொடுத்தார். அதில், ஆணாதிக்க சித்தாக்கத்தை உடைக்கவும், குழந்தைகளுக்கு பாலியல் கல்வி வழங்கவுமே தான் இப்படிச் செய்ததாக வாதிட்டார். மேலும் ஆண் மேலாடை இன்றி இருப்பதை தவறாகப் பார்ப்பதில்லை. ஆனால், பெண்ணுக்கு மட்டும் சமூகம் அப்படிக் கருதுகிறது. அதை மாற்றத்தான் இப்படிச் செய்தேன் எனவும் தன் கருத்தை வாதிட்டார்.

இதில் தீர்ப்பளித்த நீதிபதி எடப்பாகத், “ஒரு பெண்ணின் நிர்வாணத்தை ஆபாச கண்ணோட்டத்திலேயே அணுகக் கூடாது. ஆண், பெண் உடல்கள் குறித்து சமூகத்தில் இரட்டை நிலைப்பாடே இருக்கிறது. சட்டை அணியாத ஆணின் உடல் சாதாரணமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், பெண்ணின் உடல் அப்படி அல்ல. பெண்களை சிலர் பாலியல் ரீதியாக மட்டுமே பார்க்கின்றனர். அதனால்தான் பெண் நிர்வாணம் தவறானதாக மட்டுமே இங்கே பார்வை உள்ளது. நிர்வாண உடலினை சாதாரணமாக பார்க்கும்வகையில் குழந்தைகளை தனது உடலில் ஓவியம் வரைய தாய் அனுமதிப்பது தவறு இல்லை. இதையே வைத்துக்கொண்டு குழந்தைகளைப் பாலியல் செயலில் ஈடுபடுத்தியதாக சொல்லும் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது ”என்று தீர்ப்பளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in