வாலிபர் மீது ஆசிட் வீசிய பெண் கஞ்சா வியாபாரி: நடந்தது என்ன?

வாலிபர் மீது ஆசிட் வீசிய பெண் கஞ்சா வியாபாரி: நடந்தது என்ன?

கஞ்சா வாங்கிய பழைய பாக்கியைத் தராத வாலிபர் மீது பெண் கஞ்சா வியாபாரி ஆசிட் வீசிய சம்பவம் பிஹாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிஹார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் கிதாஹாரா கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் ஸ்வர்னகர். இவரது மகள் பூஜாகுமாரி(21). இவர்கள் இருவரும் அப்பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களிடம் அர்ஜுன் முகியா(26) என்ற வாலிபர் கஞ்சா வாங்க வந்தார். அவர் ஏற்கெனவே கஞ்சா வாங்கியதற்கான பாக்கிப்பணம் 950 ரூபாயைத் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பழைய பாக்கியைத் தருமாறு பூஜாகுமாரி கேட்டுள்ளார். ஆனால், விடாமல் கஞ்சா கேட்டு முகியா வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், பழைய பாக்கியைத் தந்தால் தான் கஞ்சா தருவேன் என்று பூஜா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகியா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சண்டை முற்றி கைகலப்பு வரை சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா வியாபாரியான பூஜா குமாரி, வீட்டில் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அர்ஜுன் முகியா மீது வீசினார்.

இதில் முகியாவின் முகம், கழுத்து, மார்பு வெந்து போனது. இதையடுத்து அவர் சுபால் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பூஜா குமாரி, அவரது தந்தை கணேஷ் ஸ்வர்னகர் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த பூஜா குமாரியை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். அவரது தந்தையைத் தேடி வருகின்றனர். பெண் கஞ்சா வியாபாரி ஆசிட் வீசிய சம்பவம் பிஹாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in